குஜராத்தில் சட்டவிரோதமாக இருந்த 6500 பேர்; ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு
குஜராத்தில் சட்டவிரோதமாக இருந்த 6500 பேர்; ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு
UPDATED : ஏப் 29, 2025 11:44 AM
ADDED : ஏப் 29, 2025 11:37 AM

ஆமதாபாத்: குஜராத்தில் உரிய ஆவணங்கள் இன்றி குடியிருந்த 6,500 பேரை கண்டறிந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சுமார் 450 பேர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தது உறுதியானதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், சந்தோலா ஏரி பகுதியில் அவர்கள் ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளையும் நகராட்சி நிர்வாகம் இடித்து தள்ளியது.
கடந்த மாதம் டில்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், அதே பகுதியை சேர்ந்த சந்த் மியா, என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள், விசா உள்ளிட்ட எந்தவித ஆவணங்களும் இல்லாமல் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, பல்வேறு பகுதிகளில் பதுங்கி இருப்பதாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து டில்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று தமிழகத்தில் நடத்திய சோதனையில் சென்னையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 33 பேரை கைது செய்தனர்.
![]() |
இந்த நிலையில் குஜராத் மாநிமல் ஆமதாபாத் மற்றும் சூரத்தில் போலீசார் நடத்திய சோதனை நடவடிக்கையில் உரிய ஆவணங்கள் இன்றி குடியிருந்த வங்கதேசத்தினரிடம் விசாரணை நடத்தினர். இது குறித்து போலீஸ் டிஜிபி விகாஸ் சஹாய் கூறுகையில், ''ஆமதாபாத், சூரத்தில் நடந்த தேடுதல் நடவடிக்கையில் சந்தேகத்தின் அடிப்படையில் 6500 வங்கதேச மக்களிடம் விசாரணை நடத்தினோம். அதில் 450 பேர் சட்டவிரோதமாக குடியேறியது தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்துள்ளோம். மீதமுள்ளவர்களிடமும் விசாரணை நடக்கிறது'' என்றார்.
அங்குள்ள அம்தாவாட் நகராட்சிக்கு உட்பட்ட சந்தோலா ஏரி பகுதியில் ஆக்கிரமித்து குடியேறியிருந்த இவர்களின் வீடுகளை நகராட்சி நிர்வாகமும் இடித்து தள்ளியது. கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினரை நாடு கடத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.