குஜராத்தில் அதிர்ச்சி; விமானம் விழுந்து நொறுங்கியது; 204 பேர் பலி
குஜராத்தில் அதிர்ச்சி; விமானம் விழுந்து நொறுங்கியது; 204 பேர் பலி
UPDATED : ஜூன் 12, 2025 09:38 PM
ADDED : ஜூன் 12, 2025 03:11 PM

ஆமதாபாத்: குஜராத்தில் இருந்து இன்று (ஜூன் 12) மதியம் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 -8 டிரீம் லைனர் பயணிகள் விமானம் சில நிமிடங்களில் நொறுங்கி விழுந்தது. மருத்துவக்கல்லூரி விடுதியின் மீது விழுந்த விமானம் தீ பற்றி எரிந்தது. இதில் சென்ற 242 பயணிகள் மற்றும் விடுதியில் இருந்த மருத்துவ மாணவர்களின் கதி என்ன என்ற விவரம் முழுமையாக வெளியாகவில்லை. பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தற்போது 204 பேர் பலியானதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இன்று மதியம் 1.17 க்கு ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா போயிங் 787 -8 டிரீம் லைனர் விமானம் , லண்டன் நோக்கி புறப்பட்டது. கிளம்பிய 32 நொடிகளில் 625 அடி உயரத்தில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவு சென்ற போது திடீரென நிலைதவறி மருத்துவக்கல்லூரி விடுதி ஒன்றின் மீது விழுந்து நொறுங்கியது. சம்பவம் நடந்ததும் இந்த பகுதி முழுவதும் பெரும் கரும்புகையாக மாறியது.
உடனே தேசிய பேரிடர் படையினர், தீயணைப்பு படை வீரர்கள், மருத்து குழுவினர் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலர் தீக்காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் பயணித்த 242 பேர்களில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் 169 இந்தியர்கள், பிரிட்டனை சேர்ந்தவர்கள் 53 பேர், கனடாவை சேர்ந்த ஒருவர், போர்ச்சுக்கல்லை சேர்ந்த 7 பேர் இருந்துள்ளனர். இரு விமானிகள் உள்பட 12 பணியாளர்களும் விமானத்தில் பயணித்துள்ளனர். மேலும், விபத்து நடந்த மருத்துக்கல்லூரி விடுதியில் உணவருந்திக்கொண்டிருந்த சுமார் 60 மாணவர்களும் விபத்தில் பாதிக்கப்பட்டனர்.
இந்த விமான விபத்தில் 5 மருத்துவ மாணவர்கள் உள்பட 204 பேர் உயிரிழந்ததாக தற்போது வரை தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த இடத்தை சேர்ந்த 50 மருத்துவ மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளனர்.
பெரும் தீப்பிழம்புடன் விமானம் விபத்துக்குள்ளானதால், விமானத்தில் பயணித்ததில் ஒருவர் கூட உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என ஆமதாபாத் போலீசார் தெரிவிக்கின்றனர். இதனால் பலி எண்ணிக்கை கூடும் என்கின்றனர்.
விமான விபத்து குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநில அரசிடம் கேட்டறிந்து, உடனடியாக ஆமதாபாத் விரைந்தார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முக்கிய அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.