சிறப்புகள் ஏராளம் கொண்ட புதிய விரைவுச்சாலை; 1,316 கி.மீ., தொலைவை 13 மணி நேரத்தில் கடந்து செல்ல உதவும்!
சிறப்புகள் ஏராளம் கொண்ட புதிய விரைவுச்சாலை; 1,316 கி.மீ., தொலைவை 13 மணி நேரத்தில் கடந்து செல்ல உதவும்!
UPDATED : டிச 04, 2024 05:25 PM
ADDED : டிச 04, 2024 04:22 PM

புதுடில்லி: குஜராத் மாநிலம் ஜாம்நகர் முதல் பஞ்சாபின் அமிர்தசரஸ் வரையில் 1,316 கி.மீ., தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள விரைவுச்சாலை, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய விரைவுச்சாலை என பெயர் பெற்றுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு பயண நேரமும், பணமும் மிச்சமாகும்.
தேசிய தலைநகர் டில்லியையும், மும்பையையும் இணைக்கும் வகையில் 1,350 கி.மீ., தூரத்திற்கு அமைக்கப்பட்ட விரைவுச்சாலையானது, நாட்டின் நீளமான விரைவுச் சாலை என்ற பெயரை பெற்றுள்ளது. இதன் மூலம் பயண நேரம் மிச்சமாவதால், அந்த சாலைக்கு வரவேற்பு கிடைத்து உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜாம் நகரையும், அமிர்தசரசையும் இணைக்கும் வகையில் மற்றொரு விரைவுச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
இச்சாலையில் சிறப்பு அம்சங்கள்:
* தற்போது இரு நகரங்களுக்கு இடையிலான தூரம் 1,516 கி.மீ., இதனை கடக்க 26 மணி நேரம் ஆகும்.
* புதிய விரைவுச்சாலை மூலம் இந்த நகரங்களுக்கு இடையிலான தூரம் 200 கி.மீ., குறைந்து, 1,316 கி.மீ., ஆக இருக்கும்.
* புதிய விரைவுச்சாலையில் மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் பறக்கலாம். இதனால் இரு நகரங்களுக்கான பயண நேரம் 13 மணி நேரமாக குறையும்.
*இச்சாலை, நான்கு மாநிலங்களில் (குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப்) உள்ள பதிண்டா, மோகா, ஹனுமன்கார்க், சூரத்கார்க், பிகானீர், நாகவுர், ஜோத்பூர், பார்மர் மற்றும் ஜாம் நகர் ஆகிய நகரங்களை கடந்து செல்லும்.
* இச்சாலையானது, ராஜஸ்தானில் 500 கி.மீ., தூரம் பாலைவனத்தை கடந்து செல்கிறது. ஹரியானாவில் 100 கி.மீ., தூரம் செல்கிறது. இதன் காரணமாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள தொழிற்சாலை நகரங்கள் குஜராத்தில் உள்ள தொழிற்சாலை நகரங்களுடன் நேரடியாக இணைப்பு ஏற்படும்.
* புதிய விரைவுச்சாலை டில்லி - காஷ்மீரின் காத்ரா இடையே அமைக்கப்பட்டுள்ள விரைவுச் சாலையுடன் இணைக்கப்படும். இதன் மூலம் குஜராத்தில் இருந்து காஷ்மீர் செல்வது எளிதாக அமையும்.
* ரூ.80 ஆயிரம் கோடி செலவில் இச்சாலை கட்டமைக்கப்பட்டு உள்ளது. அடுத்தாண்டு ஜன., மாதம் இச்சாலை பணிகள் முடிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* இச்சாலை அமைக்கப்பட்டுள்ள பதிண்டா, பார்மர் மற்றும் ஜாம் நகரில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்து உள்ளன. இதனால், எண்ணெய் போக்குவரத்திற்கான நேரம் கணிசமாக குறையும்
* இச்சாலை அமைந்துள்ள நகரங்களில் வணிகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் ஊக்கம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.