குஜராத்: காந்திநகரில் டைபாய்டு: 104 பேர் மருத்துவமனையில் அனுமதி
குஜராத்: காந்திநகரில் டைபாய்டு: 104 பேர் மருத்துவமனையில் அனுமதி
ADDED : ஜன 04, 2026 12:59 AM

காந்திநகர்: குஜராத் மாநிலம் காந்திநகரில் டைபாய்டு காரணமாக குழந்தைகள் உட்பட 104 பேர்வரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ம.பி., மாநிலம் இந்தூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்தது. அதனை பருகிய மக்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு 10க்கும் மேற்பட்டோர் பலியாயினர். நாடுமுழுவதும் இச் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் குஜராத் மாநிலம் காந்திநகரிலும் டைபாய்டு காரணமாக குழந்தைகள் உட்பட 104 பேர் வரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் குறித்து மாநில துணை முதல்வர் ஹர்ஷ் சங்வி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காந்திநகரில் செக்டார் 24, 25,26 28 மற்றும் ஆதிவாடா உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்ட குறைபாடு என கண்டறியப்பட்டுள்ளது. நோயாளி்களுக்கு சிகிச்சை அளிக்க 22 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது என கூறினார்.
காந்திநகர் சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பரிக் கூறுகையில் டைபாய்டு பாதிப்பு விகிதம் மூன்று நாட்களில் 50 சதவீதம் அதிகரித்து உள்ளது. பாதிக்கப்பட்ட வர்களுக்கு நடத்தப்பட்ட ரத்த பரிசோதனைகள் மூலம் டைபாய்டு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தூர் நகர சம்பவம் போல் பெரிதாகாமல் இருக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாவட்ட கலெக்டருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விரைவான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளார்.
இதனிடையே காந்திநகரில் ஆஷா பணியாளர்கள் மற்றும் 80-க்கும் மேற்பட்ட சுகாதாரப்பணியாளர்களை கொண்ட 40 குழுக்கள் வீடு வீடாகச்சென்று கணக்கெடுப்பு நடத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இது வரையில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் 10 ஆயிரம் வீடுகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

