சரண் நக்சல்கள் புதைத்து வைத்திருந்த துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்
சரண் நக்சல்கள் புதைத்து வைத்திருந்த துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்
ADDED : ஜன 11, 2025 11:01 PM

சிக்கமகளூரு: சரணடைந்த நக்சல்கள் வனப்பகுதியில் புதைத்து வைத்திருந்த, துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிக்கமகளூரு, உடுப்பி, குடகு பகுதிகளில் நக்சல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நக்சல்களான முண்டகாரு லதா, வனஜாக் ஷி, மாரப்பா என்கிற ஜெயண்ணா, சுந்தரி, ஸ்ரீஜா, வசந்த் ஆகிய 6 பேர், கடந்த 8ம் தேதி முதல்வர் சித்தராமையா முன்னிலையில் சரணடைந்தனர்.
என்.ஐ.ஏ., நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சரண் அடைந்தபோது, நக்சல்கள் ஆயுதங்களை திரும்ப ஒப்படைக்கவில்லை.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ''சரண் அடைந்த நக்சல்கள் பயன்படுத்திய, ஆயுதங்களை பற்றி எந்த தகவலும் இல்லை. ஆயுதங்களை மீட்க கொப்பா டி.எஸ்.பி., பாலாஜி சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என கூறி இருந்தார்.
இந்நிலையில் நக்சல்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், கொப்பா அருகே ஜெயபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மேகூரு கிட்டலேகுளி வனப்பகுதியில் குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்டு இருப்பதாக, கொப்பா இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத்துக்கு தகவல் கிடைத்தது.
நேற்று அதிகாலை 3:00 மணிக்கு வனப்பகுதிக்குள் சென்ற போலீசார், புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்டனர். இதுதொடர்பாக கொப்பா போலீஸ் நிலையத்தில் ஆயுதத் தடை சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவானது.
இதுபற்றி சிக்கமகளூரு எஸ்.பி., விக்ரம் ஆம்தே கூறுகையில், ''சரணடைந்த நக்சல்கள் வனப்பகுதியில் புதைத்து வைத்து இருந்த ஒரு ஏகே 56 துப்பாக்கி, மூன்று 303 ரைபிள்கள், 12 எஸ்.பி.பி.எல்.,க்கள், ஒரு நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
ஏகே 56 துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 7.62 மி.மீ., தோட்டாக்கள் 11; 303 ரைபிள்களுக்கு பயன்படுத்தும் தோட்டாக்கள் 133; எஸ்.பி.பி.எல்.,க்களுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் 24; நாட்டு துப்பாக்கிக்கு பயன்படுத்திய எட்டு தோட்டாக்கள் என 176 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. விசாரணை நடக்கிறது,'' என்றார்.