கிரிமினல் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்த குருகிராம் போலீஸ்
கிரிமினல் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்த குருகிராம் போலீஸ்
ADDED : ஜூன் 25, 2025 09:35 PM
குருகிராம்:குருகிராம் நகரில், ஆள் கடத்தல், கொலை போன்ற குற்றங்கள் தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்த கிரிமினல் குற்றவாளி, துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டான்.
கடந்த செவ்வாய்கிழமை இரவில், கவுஷல் ஜோனியவாஸ் எனப்படும், பல வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி, ஹரியானாவின் சகாராவன் என்ற கிராமத்தில் பதுங்கியிருப்பதாக, மானேசர் என்ற பகுதியின் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நள்ளிரவில் அந்த பகுதியை சுற்றி வளைத்த போலீசார், சரணடையுமாறு அவருக்கு உத்தரவிட்டனர். எனினும், அதை மதிக்காமல் கார் ஒன்றில், டில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தார்.
அதையடுத்து, அந்த காரை நிறுத்திய போலீசாரின் பிடியில் சிக்காமல் இருக்க, கவுஷல் தப்பி ஓடினார். அவரின் காலில் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். அவர் வீழ்ந்ததும், அவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
கவுஷல் ஜோனியவாஸ் என்ற அந்த குற்றவாளி மீது ஹரியானா, உ.பி., மற்றும் டில்லி போலீசில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. பணத்திற்காக ஆட்களை கடத்துவது, ஒப்பந்ததாரர் கொலை உள்ளிட்ட பல வழக்குகள் அவர் மீது உள்ளன.
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும், அவரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.