ADDED : மே 18, 2026 12:21 AM

பாலக்காடு: குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் கிழக்கு நுழைவாயிலில் அமைந்துள்ள புகழ்பெற்ற, 'குருவாயூர் கேசவன்' யானை சிலையின் தந்தங்கள், 50 ஆண்டுகளுக்குப் பின் வெற்றிகரமாக மீண்டும் பொருத்தப்பட்டு, பலப்படுத்தப்பட்டுள்ளன.
கேரளாவின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 1970ல் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, கோவில் வளாகத்தில் பல்வேறு மறுசீரமைப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக, குருவாயூர் கோவிலின் ஆன்மிக வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த, 'குருவாயூர் கேசவன்' யானையின் உருவச்சிலை, கிழக்கு நுழைவாயிலில் நிறுவப் பட்டது.
கஜராஜன் என்று அழைக்கப்படும், 10 அடி 9 அங்குல உயரமுள்ள இந்த யானை, 54 ஆண்டுகள் கோவில் சேவையில் ஈடுபட்டு, 1976ல் ஏகாதசி தினத்தில், 64 வயதில் உயிரிழந்தது.
இதன் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில், அது உயிருடன் இருந்தபோதே சிலை நிறுவப்பட்டது.
இச்சிலையின் தந்தங்கள், அப்போதைய பிரபல மரச்சிற்பக் கலைஞர் மறைந்த இளவள்ளி நாராயணன் ஆசாரியால், மிக நுணுக்கமாக செதுக்கப்பட்டு பொருத்தப்பட்டன.
தற்போது, 50 ஆண்டுகளுக்குப் பின், தளர்ந்துபோன அந்த தந்தங்களை சீரமைக்கும் பொறுப்பு, நாராயணன் ஆசாரியின் மகனும், பிரபல சிற்பியுமான இளவள்ளி நந்தனிடம் ஒப்படைக்கப்பட்டது.
காலப்போக்கில் தளர்வடைந்திருந்த இந்த தந்தங்கள், தற்போது அவற்றின் அசல் கம்பீரத்துடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக, குருவாயூர் வரலாற்றில் மிக முக்கிய அடையாளங்களுள் ஒன்று, மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
