ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சந்து தேர்தல் கமிஷனர்களாக நியமனம்
ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சந்து தேர்தல் கமிஷனர்களாக நியமனம்
ADDED : மார் 15, 2024 01:06 AM

புதுடில்லி: புதிய தேர்தல் கமிஷனர்களாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பிர் சிங் சந்து ஆகியோரை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர்மட்ட குழு தேர்ந்தெடுத்து நேற்று அறிவித்தது.
டில்லியில் உள்ள தேர்தல் கமிஷனின் தலைமை தேர்தல் கமிஷனராக ராஜிவ் குமார் உள்ளார். தேர்தல் கமிஷனர்களாக அனுாப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் பதவி வகித்து வந்தனர்.
இதில், அனுாப் சந்திர பாண்டே கடந்த மாத இறுதியில் பணி ஓய்வு பெற்றார். அருண் கோயல் திடீரென தன் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார்.
இதை தொடர்ந்து, இரு தேர்தல் கமிஷனர்களை நியமிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட வேண்டிய நேரத்தில், இந்த திடீர் ராஜினாமா, அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து, புதிய தேர்தல் கமிஷனர்களை நியமிக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர்மட்ட குழு நேற்று கூடியது. அப்போது, புதிய தேர்தல் கமிஷனர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பிர் சிங் சந்து ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த தகவலை, உயர்மட்ட குழுவில் இடம்பெற்றிருந்த லோக்சபா காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று உறுதி செய்தார்.
சுக்பிர் சிங் சந்து
கடந்த 1998ல் தேர்ச்சி பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சுக்பிர் சிங் சந்து, பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான உத்தரகண்ட் அரசில், தலைமை செயலராக பதவி வகித்தார். தேசிய நெடுஞ் சாலைகள் ஆணையத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
ஞானேஷ் குமார்
கடந்த 1988ல், கேரளாவில் இருந்து தேர்ச்சி பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ஞானேஷ் குமார், அமித் ஷா தலைமையிலான மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சகத்தின் செயலராக பதவி வகித்துள்ளார். இவர், 2024, ஜன., 31ல் பணி ஓய்வு பெற்றார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது, மத்திய உள்துறை அமைச்சகத்தில் காஷ்மீர் பிரிவுக்கு தலைமை வகித்த இவர், அப்பணிகளை தன் மேற்பார்வையில் சிறப்பாக நிறைவேற்றினார்.
இந்த தேர்வு குறித்து, உயர்மட்ட குழுவில் இடம் பெற்றிருந்த லோக்சபா காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது:
இரு தேர்தல் கமிஷனர்கள் தேர்வுக்கான 212 பேர் அடங்கிய பட்டியல், நேற்று முன்தினம் என்னிடம் வழங்கப்பட்டது. இதில் இருந்து தேர்வாகி உள்ள ஆறு நபர்களின் பட்டியல் முன்கூட்டியே என்னிடம் அளிக்கப்படவில்லை.
சட்ட அமைச்சகத்தின் தேர்வு கமிட்டி அளித்த 212 பெயர்களில் இருந்து, ஆறு பேர் எப்படி தேர்வாகினர் என்பதில் தெளிவு இல்லை. அந்த ஆறு நபர்களில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் உத்பல் குமார் சிங், பிரதீப் குமார் திரிபாதி, ஞானேஷ் குமார், இந்தேவர் பாண்டே, சுக்பிர் சிங் சந்து, சுதிர் குமார் கங்காதர் ரஹதே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இதில் இருந்து இரண்டு பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வில் வெளிப்படைத்தன்மை வேண்டுமெனில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தேர்வு குழுவில் இடம் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் கமிஷனர்களை தேர்வு செய்யும் உயர்மட்ட குழுவில், பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், மத்திய அமைச்சர் இடம் பெறுவர் என, மத்திய அரசு கடந்தாண்டு இயற்றிய சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
இதற்கிடையே நேற்று, ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சந்து ஆகியோரை தேர்தல் கமிஷனர்களாக நியமித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டது.

