தி.மு.க.,வின் பிடில் வாசிப்பு தான் விஜய்: என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு!
தி.மு.க.,வின் பிடில் வாசிப்பு தான் விஜய்: என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு!
ADDED : செப் 21, 2024 11:41 AM

சென்னை; தி.மு.க.,வுக்கு ஊதுகுழலாக இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலைக்கு நடிகர் விஜய் வந்துவிட்டார் என்று பா.ஜ., மூத்த தலைவர் ஹெச். ராஜா விமர்சித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி; கட்சிக்கு நடிகர் விஜய் வெற்றிக்கழகம் என்று வைத்திருந்தாலும், தி.மு.க.,வுக்கு ஊதுகுழலாக இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலைக்கு அவர் வந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது. அதனால் தான் ஈ.வெ.ரா., சிலைக்கு விஜய் மாலை போட போனார் என்பதையே காட்டுகிறது.
அவரது கட்சியின் மாநாட்டுக்கு எல்லா விதமான நிபந்தனைகளை போட்டு, அனுமதியே கொடுக்காமல் இருந்தனர். ஆனால் தற்போது அனுமதி கொடுத்துவிட்டதாக கூறுகின்றனர். நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு மாநாடு நடத்துவதாக இருந்தால் சினிமா தான் பண்ண வேண்டும். அரசியல் பேச முடியாது, அவ்வளவு நிபந்தனைகள் அவருக்கு போடப்பட்டு உள்ளது.
ஒரு விஷயம் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். திராவிடத்துக்கு எதிரான இருப்பிடத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே பா.ஜ.,வின் நோக்கம். தமிழக வெற்றிக்கழகம் தேர்தலில் நின்றால் யாருடைய வாக்குகளை அவர்கள் பிரிக்க முடியும்.
இன்று கல்வி உலகமயமாகி கொண்டு வரும் சூழலில் நீட் தேவையில்லை என்று தி.மு.க., வினர் கூறுகின்றனர். அவர்கள் வீட்டுக்கு மும்மொழி, தமிழ்நாட்டுக்கு இருமொழி என்பதை பின்பற்றுகின்றனர். இது ஒரு மோசடித்தனம்.
நடிகர் விஜய், தி.மு.க.,வின் ஒரு பிற்சேர்க்கை தான். எங்களுக்கு மகிழ்ச்சி தான். ஏன் என்றால் அவர் எங்களுக்கு எதிரானவர்களின் ஓட்டுக்களை தான் பிரிக்க போகிறார். ஈ.வெ.ரா., சிலைக்கு மாலை போட்டதால் அவரது மாநாட்டுக்கு அனுமதி கிடைத்திருக்கலாம்.
இந்த அரசியலுக்கு மாற்றை கொடுக்க வேண்டும் என்பதுதான் நடிகர் விஜய்யின் நோக்கம் என்றால், கொள்கையில் மாற்றம் வேணுமே? தி.மு.க.,வின் அதே கொள்கையை அவர் சொல்லிக் கொண்டு இருந்தால் மக்கள் உங்களை மாற்றாக கருதமாட்டார்கள்.
காங்கிரஸ் போன்ற கட்சிகள் எல்லாம் தி.மு.க.,வின் இலவச இணைப்புகள் தானே. அதுமாதிரி நடிகர் விஜய்யும் இலவச இணைப்பாய் இருப்பார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு ஹெச். ராஜா கூறி உள்ளார்.