'ஹேக்' செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற யு டியூப் சேனல் மீண்டும் இயக்கம்
'ஹேக்' செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற யு டியூப் சேனல் மீண்டும் இயக்கம்
ADDED : செப் 22, 2024 01:17 AM

புதுடில்லி: உச்ச நீதிமன்றத்துக்கு சொந்தமான யு டியூப் சேனல் ஹேக்கர்களால் முடக்கப்பட்ட நிலையில், அதை மீட்டு மீண்டும் இயக்கத்துக்கு கொண்டு வந்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தின் தொழில்நுட்ப பிரிவின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் 2022ல் பதவி வகித்த போது, அரசியல்சாசன அமர்வின் வழக்கு விசாரணைகள், பொதுநல வழக்குகள் ஆகியவற்றை நேரடியாக ஒளிபரப்பு செய்வது என முடிவு செய்யப்பட்டது.
அதை தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் அமல்படுத்தினார். இதற்காக யு டியூபில், 'சுப்ரீம் கோர்ட் ஆப் இந்தியா' என்ற பெயரில் சேனல் துவங்கப்பட்டது. இந்த சேனலை இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இதில், பல்வேறு முக்கிய வழக்குகளின் வாதங்கள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு பரவலாக பார்க்கப்பட்டன.
இந்நிலையில், இந்த சேனலை நேற்று முன்தினம் முடக்கிய மர்ம நபர்கள், அதில் கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரத்தை தோன்றச் செய்தனர்.
அதன்பின், உச்ச நீதிமன்ற தொழில்நுட்ப குழுவினர் தலையிட்டு சேனலை மீட்டனர். தற்போது, இந்த சேனல் மீண்டும் இயக்கத்துக்கு வந்துள்ளதாக உச்ச நீதிமன்ற தொழில்நுட்ப பிரிவு பதிவாளர் தெரிவித்துள்ளார்.
.