தெலங்கானாவில் அரைகுறையாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது
தெலங்கானாவில் அரைகுறையாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது
ADDED : ஏப் 23, 2024 06:44 PM

ஐதராபாத்: தெலங்கனாவில் 8 ஆண்டுகளுக்கு முன் அரைகுறையாக கட்டப்பட்ட பாலத்தில் ஒரு பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்த சம்பவம் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் பெட்டப்பள்ளி மாவட்டத்தில் மான்ஏர் நதியின் குறுக்கே 2016-ம் ஆண்டு ரூ. 49 கோடி திட்ட மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி துவங்கி 60 சதவீதம் முடிந்தன, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கூடுதலாக ரூ. 11 கோடி நிதி ஒதுக்கியும் பாலம் கட்டும் பணிகள் முழுமையாக முடியவில்லை என கூறப்படுகிறது.
சுமார் ஒரு கி.மீ. நீளத்திற்கு பெட்டப்பள்ளி, பாகுபல்பள்ளே மாவட்டங்களை இணைக்கும் வகையில் அரைகுறையாக கட்டப்பட்டு போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 2021ல் பெய்த கனமழை , புயலால் வலுவிழந்த நிலையில் இன்று (23.04.2024) பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்த சம்பவம் நடந்துள்ளது. இதன் புகைபடம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இப்பாலம் இடிந்து விழுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக இப்பாலம் வழியாக 65 பேருடன் திருமண கோஷ்டியினர் பேருந்து கடந்து சென்றதாகவும் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து நிகழவில்லை என கூறப்படுகிறது.

