அகல் விளக்குகள் தயாரிக்கும் மாற்றுத்திறனாளி சிறார்கள்
அகல் விளக்குகள் தயாரிக்கும் மாற்றுத்திறனாளி சிறார்கள்
ADDED : அக் 27, 2024 11:02 PM

தீபாவளி பண்டிகைக்காக, மாற்றுத்திறனாளிகள் தயாரிக்கும் ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.
தீபாவளிக்கு சிலர் பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். பலர் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி பண்டிகை கொண்டாடுவர்.
விதவித வடிவங்கள்
சமீப ஆண்டுகளாக, பட்டாசுகளால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
எனவே பட்டாசு வாங்குவது குறைந்துள்ளது. விளக்கேற்றுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பொது மக்களுக்காக, விதவிதமான வடிவங்களில் கலர், கலரான மண் விளக்குகள் மார்க்கெட்டுக்கு வந்துள்ளன. விற்பனையும் அமோகமாக நடக்கிறது. பண்டிகைக்காக மங்களூரில் பல ஆயிரக்கணக்கான விளக்குகள் தயாராகின்றன. இவற்றை மாற்றுத்திறனாளிகள் தயாரிக்கின்றனர்.
தட்சிண கன்னடா, மங்களூரில் சேவா பாரதி டிரஸ்ட் சார்பில், மாற்றுத்திறனாளி சிறார்கள் மறு வாழ்வு மையம் நடத்துகிறது. இங்குள்ளவர்களுக்கு கைவினை தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கிறது. ஆண்டுதோறும் தீபாவளிக்கு, மாற்றுத்திறனாளி சிறார்கள், மண் அகல் விளக்குகள் தயாரிக்கின்றனர்.
இவர்கள் கைவண்ணத்தில் உருவாகும் விளக்குகளுக்கு, கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுதும், அதிக மவுசு உள்ளது. இம்முறையும் விளக்கு தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
ரூ.10 - ரூ.60 வரை
இதுகுறித்து, டிரஸ்டின் கங்கராஜு கூறியதாவது:
இம்முறை தீபாவளிக்காக, சிறார்கள் அற்புதமான மண் விளக்குகள் தயாரிக்கின்றனர். ஆகஸ்டிலேயே விளக்கு தயாரிக்க துவங்கினர். வெவ்வேறு வர்ணங்களை தீட்டியுள்ளனர். வடிவம் மற்றும் அளவுக்கு தக்கபடி விலை நிர்ணயிக்கப்படுகிறது. 10 முதல் 60 ரூபாய் வரை விளக்குகள் விற்கப்படுகின்றன.
கடந்தாண்டு 15,000 மண் விளக்குகள் விற்பனையாயின. டிரஸ்டுக்கு நான்கு லட்சம் ரூபாய் வருவாய் வந்தது. இம்முறை தேவை அதிகரித்துள்ளது. 17,000க்கும் மேற்பட்ட விளக்குகள் தயாரிக்க, இலக்கு நிர்ணயித்துள்ளோம். சிறார்கள் செய்த பணிக்கு, டிசம்பரில் பணம் பெறுவர்.
மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில், மண் அகல் விளக்குகள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
முதலில் பல்வேறு அளவுகளில் விளக்குகள் தயாரிக்க பயிற்சி அளிக்கிறோம். அதன்பின் அந்த விளக்குகளுக்கு, வர்ணம் தீட்ட பயிற்சி அளிக்கிறோம்.
இத்தகைய பயிற்சி அளிப்பதால், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.
மண் விளக்குகள் மட்டுமின்றி, காகித கவர்கள், துணி கைப்பைகள், கிப்ட் கவர் என, பல்வேறு பொருட்கள் தயாரிக்கின்றனர். ஸ்க்ரீன் பிரிண்டிங்கும் செய்கின்றனர்.
மறுவாழ்வு மையத்தில் இருந்து, வீட்டுக்கு போக்குவரத்து வசதியையும், மையமே செய்கிறது. காலை 10:00 மணிக்குள் அவர்கள் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
பிரார்த்தனை முடிந்த பின், யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. உடற்பயிற்சியும் செய்வர்.
இவர்களுக்கு ராகி மால்ட், சிற்றுண்டி, மதிய உணவு, தின்பண்டங்கள் வழங்கப்படுகின்றன. 30 மாணவர்கள் கலை உட்பட, வெவ்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆட்டிசம், மூளை வளர்ச்சி குறைவான, மனநிலை சரியில்லாமை என, பல்வேறு மாற்றுத்திறனாளிகள் எங்கள் மையத்தில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.