7 நாட்களுக்குள் ஆயுதங்களை ஒப்படையுங்கள்: மணிப்பூர் மக்களுக்கு கவர்னர் வேண்டுகோள்
7 நாட்களுக்குள் ஆயுதங்களை ஒப்படையுங்கள்: மணிப்பூர் மக்களுக்கு கவர்னர் வேண்டுகோள்
ADDED : பிப் 20, 2025 05:41 PM

இம்பால்: சட்டவிரோதமாக வைத்துள்ள ஆயுதங்களை போலீசாரிடம் இளைஞர்கள் ஒப்படைக்க வேண்டும் என அம்மாநில கவர்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 20 மாதங்களுக்கும் மேலாக கூகி மற்றும் மெய்தி சமூக மக்கள் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதனையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். முதல்வராக இருந்த பா.ஜ.,வின் பைரோன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். சட்டசபை முடக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மணிப்பூர் கவர்னர் அஜய் குமார் பல்லா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 20 மாதங்களாக, மாநிலத்தில் நடக்கும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்களினால் அமைதி மற்றும் சமூக ஒற்றுமை பாதிக்கப்பட்டு உள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் அன்றாட பணிகளை செய்வதற்கு இயல்பு நிலையை கொண்டு வரவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் அனைவரும் உதவி செய்ய வேண்டும்.
இதன் காரணமாக, இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும், தாமாக முன்வந்து, கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக வைத்துள்ள ஆயுதங்களை போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரிடம் அடுத்த 7 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் உங்களின் நடவடிக்கை, மாநிலத்தில் அமைதியை உறுதி செய்ய உதவும்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆயுதங்களை ஒப்படைப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. இதன் பிறகு ஆயுதங்களை வைத்துள்ளவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கவர்னர் கூறியுள்ளார்.

