கைத்தறி தொழில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இன்ஜினியர்
கைத்தறி தொழில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இன்ஜினியர்
ADDED : செப் 21, 2024 11:13 PM

பாகல்கோட் மாவட்டத்தின் இலகல், குலேத குட்டா பகுதிகள் நெசவுத் தொழிலுக்கு பெயர் பெற்றவை. இந்த இரு இடங்களிலும் தயாரிக்கப்படும் சேலைகளுக்கு இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் மவுசு அதிகம்.
நெசவு நெய்து சேலைகள் தயாரிப்பதை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஏனோ கடந்த சில ஆண்டுகளாக, கையால் நெசவு செய்வது கணிசமாக குறைந்து வருகிறது. இதற்கு காரணம் விசைத்தறி இயந்திரங்கள் தான்.
கையால் நெசவு செய்வது குறைந்து வருவதால், இன்ஜினியர் ரமேஷ் வருத்தம் அடைந்துள்ளார். இது பற்றி இளம்தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். அவரை பற்றி பார்க்கலாம்.
குலேதகுட்டா டவுனை சேர்ந்தவர் ரமேஷ், 38. இன்ஜினியர். இவரது குடும்பம் பல ஆண்டுகளாக கையால் நெசவு செய்து வருகிறது. ரமேஷும் நேரம் கிடைக்கும்போது நெசவு செய்து வருகிறார்.
அவர் பெருமையுடன் கூறியதாவது:
இந்தப் பகுதி நெசவு தொழிலுக்கு 400 ஆண்டுகள் பழமையான வரலாறு உள்ளது. எங்கள் பகுதியில் பிரதான தொழிலே நெசவு தான். பெரும்பாலானோருக்கு நெசவை தவிர வேறு எதுவுமே தெரியாது.
கையால் நெசவு செய்வதை பெரும் பாக்கியமாகக் கருதினர். கையிலே சேலைகளில் டிசைன்களும் வடிவமைப்பர். சேலை தயாரிக்க 8 பேர் தேவைப்படுவர்.
தற்போது விசைத்தறி இயந்திரத்தை பயன்படுத்தி, சேலைகளை வடிவமைக்கின்றனர். இதை பார்க்கும்போது மனது கஷ்டமாக உள்ளது. இயந்திரம் வந்துவிட்டது என்பதற்காக, பாரம்பரியத்தை கைவிட வேண்டுமா?
பெங்களூரில் விசைத்தறி இயந்திரங்களை பயன்படுத்தி, சேலைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் எங்கள் ஊரை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வேலை செய்கின்றனர்.
நம்மிடமே கைத்தொழில் இருக்கும்போது, அடுத்தவர்களிடம் சென்று கஷ்டப்பட வேண்டிய அவசியம் என்ன? எங்கள் ஊர் இளைஞர்களுக்கு கையால் நெசவு செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். எந்த காலத்திலும் கையால் நெசவு செய்வது நின்று போகக்கூடாது என்பது என் ஆசை.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.