ADDED : அக் 09, 2024 11:00 PM

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில், நல்ல மழை பெய்துள்ளது. நீர் வீழ்ச்சிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணியர் நீர் வீழ்ச்சிகளை தேடித்தேடி ரசிக்கின்றனர்.
* ஹனுமன்குந்தி
சிக்கமகளூரின் குதுரேமுக் தேசிய பூங்கா அருகில், ஹனுமன்குந்தி நீர் வீழ்ச்சி உள்ளது. பாறைகளின் மீதிருந்து தண்ணீர் பாய்ந்து வருகிறது. பசுமையான காடுகள், மலை, குன்றுகள் நிறைந்த நிசப்தமான இடத்தில், நீர் வீழ்ச்சி உள்ளது. இதன் உச்சியை அடைய, 300 கற்களால் அமைக்கப்பட்ட படிகளில் ஏற வேண்டும். மேற்பகுதியில் குளம் உள்ளது. அது ஆழமானது அல்ல. இதில் குளிக்கலாம். ஆனால் 100 அடி உயரத்தில் இருந்து, கீழே பாயும் நீரை பார்க்கலாம். நீர் வீழ்ச்சியில் இறங்க கூடாது.
ஹனுமன்குந்தி நீர் வீழ்ச்சியை, உள்ளூர் மக்கள் சுதநாப்பி நீர் வீழ்ச்சி என்றும் அழைக்கின்றனர். இயற்கையை நேசிப்போருக்கு பிடித்தமான இடமாகும். பரபரப்பான நகர வாழ்க்கையை வெறுத்தவர்கள், வனத்தின் நடுவே அமைதியான சூழ்நிலையில் பொழுது போக்கலாம். நீர் வீழ்ச்சி அருகில் குகைகளும் உள்ளன.
* வன விலங்குகள்
குதுரேமுக் தேசிய பூங்கா அருகில் நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. எனவே புலி, சிறுத்தை, யானைகள் என வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குதுரேமுக், ஹனுமன்குந்தி நீர் வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் காட்டேஜ், ஹோம் ஸ்டேக்கள் உள்ளன. எனவே நீர் வீழ்ச்சி அருகில் இரவை கழிக்கலாம்.
தினமும் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நீர் வீழ்ச்சியை காண அனுமதி உண்டு. ஒருவருக்கு 50 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகனங்களை நிறுத்த கூடுதலாக 20 முதல் 30 ரூபாய் வரை செலுத்த வேண்டும். குடிநீர், உணவை கொண்டு செல்லலாம்.
சிக்கமகளூரில் இருந்து, 120 கி.மீ., தொலைவில் ஹனுமன் குந்தி நீர் வீழ்ச்சி உள்ளது. அங்கிருந்து குதுரேமுக் 19 கி.மீ., தொலைவில் உள்ளது. நீர் வீழ்ச்சிக்கு 80 கி.மீ., தொலைவில் ரயில் நிலையம், மங்களூரு விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து நான்கைந்து கி.மீ., தொலைவிலேயே நீர் வீழ்ச்சி உள்ளது.
குதுரேமுக்கில் இருந்து அரசு பஸ், வாடகை கார்கள் இயங்குகின்றன. பெங்களூரில் இருந்து விமானத்தில் வருவோர், மங்களூரு விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து வாடகை வாகனங்களில் நீர் வீழ்ச்சிக்கு வரலாம்.
* மங்களூரு
மங்களூரு நகரில் இருந்து, 12 கி.மீ., தொலைவில் அட்யார் நீர் வீழ்ச்சி உள்ளது. இது மக்களின் கண்களுக்கு அதிகம் தென்படாத ரகசிய சொர்க்கமாகும். இந்த நீர் வீழ்ச்சியை பார்க்க, புதிதாக வருவோர் உள்ளூர் வாசிகளின் உதவியை நாடுவது நல்லது. இல்லையென்றால் பாதை தெரியாமல் அவதிப்பட நேரிடும்.
மன அமைதியுடன், இயற்கையுடன் இணைந்து பொழுது போக்க விரும்பினால், அலேகன் நீர் வீழ்ச்சிக்கு வரலாம். இயற்கை ஆர்வலர்களுக்காகவே, இறைவன் உருவாக்கிய இடம். சுற்றுலா பயணியரை கவர்ந்திழுக்கிறது. சாகச பிரியர்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும்.
மங்களூரின் அருகில் உள்ள அழகான, பிரபலமான நீர் வீழ்ச்சிகளில் பன்டாஜே அர்பி நீர் வீழ்ச்சியும் ஒன்றாகும். இது 200 அடி உயரத்தில் இருந்து பாய்கிறது. இதன் உச்சியில் இருந்து பார்ப்பது, அற்புதமாக இருக்கும். கடல் மட்டத்தில் இருந்து 700 மீட்டர் உயரத்தில் நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது.
மங்களூரு மக்களில் பலரும், தங்களின் வார இறுதி நாட்களை கழிக்கும் இடம் தொன்டோல் ஈர் வீழ்ச்சி. மங்களூருக்கு அருகிலேயே உள்ளது. வாடகை ஜீப்பில் இங்கு செல்லலாம். 50 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் பாய்கிறது. இப்பகுதியில் அபூர்வமான மூலிகைகள் நிறைந்துள்ளன. பறவைகள் இங்குள்ளன. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், வன விலங்குகளையும் பார்க்க நேரிடலாம்.
- நமது நிருபர் -