கணவர் வீட்டில் துன்புறுத்தல் குழந்தையுடன் தாய் கதறல்
கணவர் வீட்டில் துன்புறுத்தல் குழந்தையுடன் தாய் கதறல்
ADDED : மார் 07, 2024 03:38 AM
சிக்கபல்லாபூர் : பெண் குழந்தை பெற்ற தன்னை, கணவர் வீட்டார் துன்புறுத்துவதால், குழந்தையை மருத்துவமனையிலேயே வைத்துக் கொள்ளும்படி தாய் மன்றாடியது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிக்கபல்லாபூர், பாகேபள்ளியின், மரசனா கிராமத்தில் வசிப்பவர் லட்சுமி நாராயணா, 34. இவரது மனைவி ராஜம்மா, 30. தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. ராஜம்மா மூன்றாவதாக கர்ப்பமடைந்தார்.
ஆண் குழந்தை பிறக்கும் என, குடும்பத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால் நான்கு மாதங்களுக்கு முன், பெண் குழந்தை பிறந்தது. மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்ததால், கணவர் வீட்டினர் ராஜம்மாவை சித்ரவதை செய்தனர்.
இவருக்கு மூன்றாவது குழந்தை பிறந்த போது, சிசேரியன் நடந்தது. 'மிகவும் பலவீனமாக இருந்ததால், நன்றாக ஓய்வெடுக்க வேண்டும், சிகிச்சை பெற வேண்டும்' என, டாக்டர்கள் கூறியுள்ளனர்.
மற்றொரு பக்கம் குழந்தையை பராமரிக்க வேண்டும். ஆனால் கணவர் வீட்டில் ஓய்வெடுக்க விடவில்லை. சிகிச்சையும் அளிக்கவில்லை. பல வகைகளில் துன்புறுத்தினர்.
எனவே மனம் நொந்த ராஜம்மா, நேற்று காலை குழந்தையுடன், மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வந்தார். 'என்னால் பராமரிக்க முடியவில்லை. பெண் குழந்தை என்பதால், கணவர் வீட்டில் இம்சிக்கின்றனர். குழந்தையை இங்கேயே வைத்துக் கொள்ளுங்கள்' என, மன்றாடினார்.
மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், அங்கு வந்து ராஜம்மாவின் கணவரை வரவழைத்து அறிவுரை கூறினர். அவரும் மனைவி, குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்வதாக கூறி, அழைத்து சென்றார்.

