ADDED : ஜன 21, 2025 07:12 AM
ஷிவமொக்கா: கடூரமாக ஹாரன் அடித்து பொது மக்களை இம்சித்த வாகன பயணியருக்கு, இன்ஸ்பெக்டர் ஒருவர் நுாதன முறையில் தண்டனை கொடுத்தார்.
சில வாகன ஓட்டுனர்கள், தேவையின்றி கடூரமாக ஹார்ன் அடித்து பொது மக்களுக்கு தொந்தரவு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். சாலைகளில் செல்லும் மற்ற பயணியரும் பாதிப்படைகின்றனர்.
ஷிவமொக்கா நகர போக்குவரத்து போலீஸ் நிலைய போலீசார், நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சில வாகனங்கள் அதிக சத்தத்துடன் ஹாரன் அடித்தபடி சென்றன.
இவர்களுக்கு போலீஸ் எஸ்.ஐ., திருமலேஷ், நுாதன முறையில் பாடம் புகட்டினார். அதிக சத்தத்துடன் ஹாரன் அடித்தபடி வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினார். ஓட்டுனர்களை கீழே இறக்கி, ஹாரன் சத்தத்தை அவர்களின் காதுகளில் ஒலிக்க வைத்து தண்டித்தார்.
இது தொடர்பான வீடியோ, நேற்று சமூக வலைதளங்களில் பரவியது. எஸ்.ஐ.,யின் நடவடிக்கையை பலரும் பாராட்டினர். கடூரமாக சத்தம் எழுப்பும் ஹார்ன் வைத்துள்ளவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளனர்.

