sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹரியானாவில் மீண்டும் பா.ஜ., ஆட்சி மூன்றாம் முறை!

/

ஹரியானாவில் மீண்டும் பா.ஜ., ஆட்சி மூன்றாம் முறை!

ஹரியானாவில் மீண்டும் பா.ஜ., ஆட்சி மூன்றாம் முறை!

ஹரியானாவில் மீண்டும் பா.ஜ., ஆட்சி மூன்றாம் முறை!

13


UPDATED : அக் 08, 2024 11:56 PM

ADDED : அக் 08, 2024 11:47 PM

Google News

UPDATED : அக் 08, 2024 11:56 PM ADDED : அக் 08, 2024 11:47 PM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, அக். 9- கருத்து கணிப்புகள் மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் மீண்டும் தோல்வியடைந்தன. ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என, அவை கூறியிருந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சியைப் பிடித்தது.

ஹரியானாவில், 1966ல் இருந்து நடந்த தேர்தல்களில் காங்கிரஸ், ஜனதா கட்சிகளே வென்று வந்தன. பஜன்லால், பன்சி லால், தேவிலால் ஆகிய மூன்று லால்களுக்குப் பின், ஓம் பிரகாஷ் சவுதாலா வென்று வந்தார்.

ஜாதி அரசியலுக்கு சிறந்த உதாரணமாக கூறப்படும் ஹரியானாவில், 2014ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து, 2019ல் ஆட்சியை தக்க வைத்தது.

ஜாதி அரசியல் மற்றும் விவசாயிகள் போராட்டம் போன்றவை, ஆட்சிக்கு எதிரான மனநிலையை உருவாக்கின. இதையடுத்து கடந்த, ஏப்., - மே மாதங்களில் நடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டாரை பா.ஜ., மாற்றியது. நயாப் சிங் சைனி முதல்வரானார். லோக்சபா தேர்தலில், மொத்தமுள்ள, 1-0 இடங்களில், ஐந்தில் மட்டுமே பா.ஜ., வென்றது.

காங்கிரஸ் ஐந்து இடங்களை வென்றது. லோக்சபா தேர்தலில் நாடு முழுதும், முந்தைய தேர்தலைவிட அதிக இடங்களில் காங்கிரஸ் வென்றது. இதையடுத்து, அக்கட்சி மிகுந்த உற்சாகத்துடன் இருந்தது.

இந்நிலையில், 90 தொகுதிகள் உள்ள ஹரியானா சட்டசபைக்கு, 5ம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் மற்றும் ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கணிப்புகள், காங்கிரஸ் அபார வெற்றியைப் பெறும் என்று தெரிவித்தன.

இந்நிலையில், தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. காலை 8:00 மணிக்கு துவங்கிய ஓட்டு எண்ணிக்கையில், முதல் இரண்டு மணி நேரம் வரை, காங்கிரசே முன்னிலையில் இருந்தது.

இதையடுத்து காங்கிரஸ் அலுவலகத்தில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

Image 1330467


இந்நிலையில், யாரும் எதிர்பாராத திருப்பமாக, நிலைமை தலைகீழாக மாறியது. பா.ஜ., முன்னிலை பெறத் துவங்கியது. இறுதியில், பெரும்பான்மைக்கு, 46 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ., 48 இடங்களில் வென்றது. காங்கிரஸ், 37 இடங்களில் வென்றது. இந்திய தேசிய லோக் தளம், இரண்டு இடங்களிலும், சுயேச்சைகள் மூன்று இடங்களிலும் வென்றனர்.

மாநில கட்சிகளான இந்திய தேசிய லோக் தளம், அதில் இருந்து பிரிந்த ஜே.ஜே.பி., எனப்படும் ஜனநாயக ஜனதா கட்சி ஆகியவை பின்னுக்கு தள்ளப்பட்டன.

கடந்த தேர்தலில், பா.ஜ., அதிக இடங்களில் வென்றாலும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, ஜே.ஜே.பி.,யுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. தற்போது தனிப்பெரும்பான்மையுடன், மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து உள்ளது.

கருத்து கணிப்புகள் கூறியதற்கு எதிராக, பா.ஜ.அமோக வெற்றி பெற்றது. இதுபோலவே, ஜம்மு - காஷ்மீரில் தொங்கு சட்டசபை ஏற்படும் என, கணிப்புகள் கூறியிருந்தன. ஆனால், தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து, கணிப்புகள் மீண்டும் தோல்வி அடைந்துள்ளன. நாயப் சிங் சைனியே மீண்டும் முதல்வராவார் என பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.

Image 1330468


நிலைமை மாறியது எப்படி?

பா.ஜ., அரசுக்கு எதிராக மனநிலை இருந்தது, காங்கிரஸ் மிகவும் நம்பிக்கையுடன் களமிறங்கியது போன்ற காரணங்கள் இருந்தபோதும், ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை காங்கிரஸ் இழந்ததற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன.கோஷ்டி மோதல் : கடந்த தேர்தலில், 31 இடங்களில் வென்ற நிலையில், தற்போது, 37 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. இதற்கு முக்கிய காரணம், கட்சியில் உள்ள கோஷ்டி மோதல். இது பிரசாரத்தின்போது வெளிப்படையாகவே தெரிந்தது. யார் முதல்வர் வேட்பாளர் என்பதில், குமாரி செல்ஜா மற்றும் முன்னாள் முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா இடையே கடுமையான போட்டி இருந்தது. ஓட்டு பிரிப்பு : ஒட்டுமொத்தமாக, பா.ஜ.,வைவிட காங்கிரசின் ஓட்டு சதவீதம் அதிகம் உள்ளது. ஆனால், அதை அதிக தொகுதிகளாக மாற்றுவதில் காங்., தவறிவிட்டது. சுயேச்சைகள் மற்றும் பிராந்திய கட்சிகள், காங்கிரசுக்கு கிடைக்க வேண்டிய ஆட்சிக்கு எதிரான ஓட்டுக்களை பிரித்தன. அதே நேரத்தில் பிராந்திய கட்சிகளும் பெரிய வெற்றியை பெறவில்லை.ஜாதி அரசியல் : ஹரியானாவில் ஜாட் சமூகத்தினர் ஓட்டுக்களை பெறுவதற்கான முயற்சிகளில் காங்கிரஸ் தீவிரமாக இறங்கியது. அதே நேரத்தில் ஜாட் அல்லாதோரின் ஓட்டுகளுக்கு பா.ஜ., குறிவைத்தது. அதற்கு தகுந்த பலனும் கிடைத்துள்ளது.பிரசார யுக்தி : தேர்தல் நிபுணர்கள், பா.ஜ., ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லவே இல்லை என்று முதலில் இருந்தே உறுதியாக கூறினர்.
ஆனால், தேர்தல் இயந்திரமாகக் கருதப்படும் பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதானை, ஹரியானா மாநில தேர்தல் பொறுப்பாளராக்கியது. ஹரியானா குறித்து விரிவாக ஆய்வு செய்து, சரியாக அவர் திட்டமிட்டதே, இந்த வெற்றியை சாத்தியமாக்கியது. இதில் இருந்து, பா.ஜ., ஒரு தேர்தல் இயந்திரம் என்பது மீண்டும் நிரூபிக்கப்ப்டடுள்ளது.நகர்ப்புற ஆதிகம் : ஹரியானாவின் நகர்ப்பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ., கவனம் செலுத்தி வந்தது. குருகான், பரிதாபாத் உள்ளிட்ட முக்கிய நகர்ப்பகுதிகளில் அது அதிக ஓட்டுக்களையும், அதிக இடங்களையும் பிடித்துள்ளது. கிராமப்பகுதிகளில் அள்ளுவோம் என்று காங்கிரஸ் கூறி வந்தது. ஆனால், அது நடக்கவில்லை.



மாறிய கொண்டாட்டம்!

ஓட்டு எண்ணிக்கை துவங்கிய உடன், காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை பெற்று வந்தது. இதையடுத்து, சண்டிகர் உட்பட முக்கிய நகரங்களில் உள்ள கட்சி அலுவலகத்தில் மக்கள் கூடினர். மேளங்கள் முழங்கி, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர்.ஓட்டு எண்ணிக்கை துவங்கி இரண்டு மணி நேரம் கடந்த நிலையில், நிலைமை தலைகீழாக மாறியது. பா.ஜ., முன்னிலைப் பெறத் துவங்கியது. இதையடுத்து, காங்கிரஸ் அலுவலகங்களில் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன. பா.ஜ., அலுவலகங்களில் கொண்டாட்டங்கள் துவங்கின.ஹரியானாவில் தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைக்க வழிவகுத்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் கூறியுள்ளதாவது:நல்லாட்சிக்கும், வளர்ச்சி அரசியலுக்கும் கிடைத்த வரலாற்று வெற்றியாக இதை கருதகிறேன். இந்தத் தருணத்தில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கிறேன். இந்த வெற்றிக்கு அயராது உழைத்ததுடன், முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். மாநில மக்களுக்கு சேவையாற்றியதுடன், வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தியதும் தான் ஹரியானா மாநிலத்தில் பா.ஜ., வரலாற்று வெற்றி பெற வழிவகுத்தது.ஜம்மு - காஷ்மீரில் நடந்த சட்டசபை தேர்தல் சிறப்பு வாய்ந்தது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் நடந்த முதல் தேர்தல். இதில், ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஆர்வமுடன் ஓட்டளித்தனர்.
இது, ஜனநாயகத்தின் மீது அந்த மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இதற்காக, ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஒவ்வொருவரையும் பாராட்டுகிறேன்.ஜம்மு - காஷ்மீரில் பா.ஜ.,வின் செயல்பாட்டை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். எங்கள் கட்சியின் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி. ஜம்மு - காஷ்மீர் நலனுக்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். சிறப்பான வெற்றியை பதிவு செய்த தேசிய மாநாட்டு கட்சிக்குபாராட்டுகள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



ஹாட்ரிக் அடித்த பா.ஜ., முதல்வர்கள்


1) நரேந்திர மோடி - குஜராத் ( 2001 - 2014 )

2) ரமண் சிங் - சத்தீஸ்கர் (2003 - 2018)

3) சிவ்ராஜ் சிங் சவுகான் - ம.பி., 2005 - 2018






      Dinamalar
      Follow us