ஹரியானா சட்டசபை கூட்டத் தொடர் இன்று துவக்கம்; 23ல் பட்ஜெட்
ஹரியானா சட்டசபை கூட்டத் தொடர் இன்று துவக்கம்; 23ல் பட்ஜெட்
ADDED : பிப் 20, 2024 12:10 AM

சண்டிகர்:ஹரியானா சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் இன்று துவங்குகிறது.
நிதித் துறையை கவனிக்கும் முதல்வர் மனோகர் லால் கட்டார், 23ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்த ஆண்டு இறுதியில் ஹரியானா சட்டசபைக்கு தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், தனது இரண்டாவது பதவிக்காலத்தின் கடைசி பட்ஜெட்டை முதல்வர் கட்டார் தாக்கல் செய்கிறார்.
சுகாதாரம், கல்வி, கிராமப்புற மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என முதல்வர் மனோகர் லால் கட்டார் தெர்வித்துள்ளார்.
அதேநேரத்தில், பஞ்சாப்- - ஹரியானா எல்லையில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து முகாமிட்டுள்ளதால், விவசாயிகள் போராட்டம் குறித்த பிரச்சனையை ஹரியானா சட்டசபையில் பூதாகரமாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா கூறியதாவது:
முதல்வர் கட்டார் அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது.
இந்த கூட்டத்தொடரில் கட்டார் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும்.
மாநிலத்தில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், திறன் வேலை வாய்ப்புக் கழக முறைகேடுகள், இஸ்ரேல் இளைஞர்களை போர்ப் பகுதிக்கு அனுப்புதல், ஹரியானாவில் வெளியாட்களுக்கு வேலை வழங்குதல் ஆகியவை குறித்து காங்கிரஸ் கட்சி கேள்விகள் எழுப்பும்.
மேலும், மாநில அரசுக்கு அதிகரித்து வரும் கடன், போதைப்பொருள் புழக்கம், விவசாயிகளின் அவலநிலை மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு போன்ற பிரச்னைகள் குறித்து சட்டசபையில் கேள்விகள் கேட்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், பா.ஜ., அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.
ஆனால் அது வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் கட்சி மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால், அரசு செய்த பணிகள் குறித்து விரிவாக விளக்குவோம் என முதல்வர் கட்டார் தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் 90 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட சட்டசபையில் 41 இடங்களை பா.ஜ., தக்க வைத்துள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி 10 எம்.எல்.ஏ.,க்களை வைத்துள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 30 எம்.எல்.ஏ.,க்களும், இந்திய தேசிய லோக்தளம் கட்சி எம்.எல்.ஏ., ஒருவரும் உள்ளனர்.

