ஹரியானா தேர்தலில் ஒரு சின்ன டுவிஸ்ட்! பா.ஜ., வேட்பாளரின் குபீர் அறிவிப்பு
ஹரியானா தேர்தலில் ஒரு சின்ன டுவிஸ்ட்! பா.ஜ., வேட்பாளரின் குபீர் அறிவிப்பு
ADDED : செப் 16, 2024 05:27 PM

சண்டிகர்; ஹரியானா தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் திடீரென போட்டியில் இருந்து பின்வாங்கி உள்ளார்.
ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது. அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பணிகளில் மும்முரமாக களம் இறங்கி உள்ளனர்.
இந் நிலையில் சிர்சா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ரோஹ்தாஷ் ஜாங்ரா என்பவர் போட்டியில் இருந்து பின்வாங்கி உள்ளார். அவர் தமது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார். அந்த தொகுதியில் ஹரியானா லோக்ஹித் கட்சியின் தலைவர் கோபால் கண்டாவுக்கு பா.ஜ., தலைமை ஆதரவு தெரிவித்துள்ளதால் இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
இது குறித்து ரோஹ்தாஷ் ஜாங்ரா கூறி உள்ளதாவது; நான் எனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுவிட்டேன். மாநிலம் மற்றும் நாட்டின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன். காங்கிரஸ் அல்லாத ஹரியானா என்பதே எங்கள் இலக்கு என்று தெரிவித்துள்ளார்.
சிர்சா தொகுதியை தவிர்த்து மற்ற தொகுதிகளில் பா.ஜ., தனித்தே களம் காண்கிறது. கடந்த தேர்தலில் சிர்சா தொகுதியில் வென்ற கோபால் கண்டா பின்னர் பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். இம்முறையும் அங்கே போட்டியிடுவதால் வெற்றி பெற்றால் பா.ஜ.,வை ஆதரிப்பார் என்று கூறப்படுகிறது.

