காங்கிரஸ் தலித் விரோத கட்சி ஹரியானா முதல்வர் குற்றச்சாட்டு
காங்கிரஸ் தலித் விரோத கட்சி ஹரியானா முதல்வர் குற்றச்சாட்டு
ADDED : செப் 24, 2024 07:33 PM

சண்டிகர்:“காங்கிரஸ் ஒரு தலித் விரோத கட்சி. அக்கட்சியின் பூபிந்தர் சிங் ஹூடாவின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த வன்முறைகளை தலித்துகளுக்கு நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை,” என, ஹரியானா முதலவர் நயாப் சிங் சைனி கூறியுள்ளார்.
ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தல் அக்டோபர் 5ம் தேதி நடக்கிறது. ஆளும் பா.ஜ., பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹரியானா முதல்வரும் பா.ஜ., மூத்த தலைவருமான நயாப் சிங் சைனி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அது ஹரியானாவின் தலித்துகளுக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை நினைவுபடுத்த தேவையில்லை. கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் தலித்துகள் மீது ஏவப்பட்ட வன்முறையை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. தலித் ஒடுக்குமுறை வழக்குகள் அனைத்திலும், ஹூடா அரசு மிகவும் மவுனமாக இருந்ததை மறக்க முடியாது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கோஹானா மற்றும் மிர்ச்பூரில் நடந்த சம்பவங்களை யாருமே மறக்க மாட்டார்கள். மிர்ச்பூரில் ஒரு தலித் பெண் அதிகாரி உயிரோடு எரிக்கப்பட்டார். அந்தக் கொடூரம் காங்கிரஸ் ஆட்சியில்தான் நடந்தது கோஹானாவில் தலித்துகளின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சி எப்போதுமே தலித்துகளுக்கு எதிரானது.
பாபா சாகேப் அம்பேத்கர் முதல் பாபு ஜக்ஜீவன் ராம் வரை, சீதாராம் கேசரி, அசோக் தன்வார் மற்றும் குமாரி செல்ஜா என தலித் தலைவர்களை காங்கிரஸ் அவமானப்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தலித்துகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என வெளிநாட்டில் பேசுகிறார். இதுதான் அவரது பழைய பரம்பரை மனப்பான்மை. கொடுமைப்படுத்துதல் மற்றும் பயங்கரவாதம் ஆகியவை காங்கிரஸின் ஆயுதங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.