உடலையும், மனதையும் ஆரோக்கியமாக பராமரிக்க ஹரியானா முதல்வர் அறிவுரை
உடலையும், மனதையும் ஆரோக்கியமாக பராமரிக்க ஹரியானா முதல்வர் அறிவுரை
ADDED : ஜூலை 14, 2025 03:21 AM

சண்டிகர்:''இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமை ஆகாமல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்,'' என, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி பேசினார்.
ஹரியானா மாநிலம் கைத்தால் நகரில், போதைப் பொருளுக்கு எதிரான மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து நேற்று துவக்கி வைத்த, முதல்வர் நயாப் சிங் சைனி பேசியதாவது:
இளைஞர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நம் மாநிலம் மட்டுமின்றி நாடும் அதிவேகத்தில் முன்னேற, இளைஞர்கள் தங்கள் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
சமூக ஈடுபாடு வாயிலாக பொது நலனை ஊக்குவிக்க, 2023ம் ஆண்டு ஜூன் மாதம் துவக்கப்பட்ட 'ஹரியானா உதய்' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாரத்தான் ஓட்டம் நடத்தப்படுகிறது.
இதில், அனைத்து தரப்பினரும் பங்கேற்று, போதைப் பொருளுக்கு எதிராக ஹரியானா ஒன்றுபட்டு நிற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆரோக்கியமான மக்களால் தான் ஆரோக்கியமான சமூகத்தையும் உருவாக்க முடியும். ஹரியானாவில் மாரத்தான், விளையாட்டு, யோகா மற்றும் ராகிரி ஆகியவற்றை அரசு ஊக்குவித்து வருகிறது.
போதைப் பொருட்களின் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, போதைப்பொருள் இல்லாத மாநிலமாக ஹரியானாவை மாற்றுவதே அரசின் நோக்கம்.
அதற்கான, சமீபத்தில், 'போதைப்பொருள் இல்லாத ஹரியானா சைக்ளோத்தான் - 2.0' போதைப் பொருளுக்கு எதிரான பிரசாரங்களில் இதுவரை, 7 லட்சத்து 23,568 பேர் பங்கேற்றுஉள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
நேற்று நடந்த மாரத்தானில், 5, 10 மற்றும் 21 கி.மீ., என, மூன்று பிரிவுகளில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.