UPDATED : அக் 09, 2024 11:50 PM
ADDED : அக் 09, 2024 11:46 PM

புதுடில்லி : ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கும், அதன் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே நிலவிய பனிப்போர் முடிவுக்கு வந்தது தான், ஹரியானா தேர்தலின் முடிவை தலைகீழாக புரட்டிப் போட்டது என தெரிய வந்துள்ளது.
கருத்துக் கணிப்புகள் ஒரே மாதிரியாக இருந்ததே இல்லை. அந்த அதிசயம் ஹரியானா தேர்தலில் முதல் முறையாக நடந்தது. எல்லா கணிப்புகளும் காங்கிரஸ் ஜெயிக்கும் என அடித்துக் கூறின.
ஆனால், பா.ஜ., மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மோடி தலைமையில் மூன்றாம் முறையாக மத்தியில் ஆட்சியை பிடித்தாலும், பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி தயவில் தான் ஆட்சி அமைந்தது.
மாறாக, ஹரியானாவில் பெரும்பான்மை தொகுதிகளை பிடித்ததுடன், ஓட்டு சதவீதத்தையும் பா.ஜ., அதிகரித்து உள்ளது.
சாதனை
இது பெருமைக்குரிய சாதனை மட்டுமல்ல; யாரும் எதிர்பாராத திருப்பம். ஓட்டு இயந்திரம் மீது பழி போடும் அளவுக்கு காங்கிரஸ் மனம் உடைந்து போயிருப்பதே அதற்கு சான்று. இந்த சாதனை எப்படி சாத்தியமானது? அரசியல் விமர்சகர்கள் ஆளுக்கொரு காரணம் சொல்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ்., களம் இறங்கியது தான் தேர்தல் முடிவை திசை திருப்பியது என்பது அவர்கள் பார்வையில் விடுபட்ட தகவல். ஓட்டு போட்ட மக்களிடமே கேட்டு தெரிந்து கொண்ட தகவல்களின் தொகுப்பு இது:
ஹரியானாவில் 2019 லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 10 தொகுதிகளையும் பா.ஜ., கைப்பற்றியது. ஆனால், 2024 தேர்தலில் பாதி இடங்களே கிடைத்தன.
அகில இந்திய அளவில் 400+ இடங்களை பிடிப்போம் என பேசி வந்த பா.ஜ., தலைவர்களுக்கு, குறைந்தபட்ச பெரும்பான்மையான 273 கூட தேறவில்லை என்பது அதிர்ச்சி அளித்தது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை விட்டு விலகிச் சென்றதன் விளைவு என்பதை புரிந்து கொண்டனர்.
ஆர்.எஸ்.எஸ்., தயவு தேவைப்படும் நிலையில் பா.ஜ., இல்லை என கட்சியின் தேசிய தலைவர் நட்டா, லோக்சபா தேர்தலுக்கு முன் சொன்னார்.
மோடி அரசின் பல நடவடிக்கைகளும், அவரது அணுகுமுறையும் தங்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை என்பதை ஆர்.எஸ்.எஸ்., நாசூக்காக உணர்த்தியும், அரசின் போக்கில் மாற்றம் தெரியவில்லை.
இதனால், ஒவ்வொரு தேர்தலிலும் பா.ஜ.,வுக்காக களப்பணி ஆற்றிய ஆர்.எஸ்.எஸ்., முதல் முறையாக இந்தாண்டு லோக்சபா தேர்தலில் ஒதுங்கி நின்றது. அதன் தாக்கம் என்ன என்பது வரலாறு.
பத்தாண்டுகள் ஆட்சி செய்த ஹரியானாவும் கைவிட்டு போனால், அடுத்து வரும் மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், டில்லி, பீஹார் தேர்தல்களை சந்திப்பது பெரும் சவாலாகி விடும் என்பதை உணர்ந்து பா.ஜ., தலைமை சுதாரித்தது.
முதல்வர் மாற்றம்
ஆர்.எஸ்.எஸ்., மேலிடத்துடன் சமாதானம் பேசினர். நீரடித்து நீர் விலகாது என்ற ரீதியில் உடனடி சமரசம் ஏற்பட்டது. ஜூலை 29ல் ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர் அருண் குமாரை, ஹரியானா மாநில பா.ஜ., தலைவர் மோகன்லால் பர்தோலி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்தித்தனர். விவசாயிகள் போராட்டத்தை சரியாக கையாளாமலும், கட்சியினரை சந்திக்காமலும் மக்கள் செல்வாக்கை இழந்த முதல்வர் கட்டாரை மாற்ற முதல் முடிவு எடுக்கப்பட்டது.
பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த சைனியை முதல்வராக்க தீர்மானித்தனர். அவருடைய ஒரே வேலை கிராமங்களுக்கு சென்று கட்சியினரையும், விவசாயிகளையும் சந்தித்து மனக்காயத்துக்கு மருந்திடுவது என தெரிவிக்கப்பட்டது.
மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் சுறுசுறுப்பான மாற்றுக் கட்சிகளின் தலைவர்களை பா.ஜ.,வுக்கு அழைத்து வரும் பணி மாநில பா.ஜ., தலைமைக்கு தரப்பட்டது. கட்டார் மீதும், கட்சியின் மீதும் அதிருப்தியில் இருக்கும் தொண்டர்களுக்கு பதிலாக, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களே களம் இறங்கி, கூப்பிய கரங்களுடன் வீடு வீடாக வாக்காளர்களை சந்தித்து, பா.ஜ., எதிர்ப்பு எண்ணத்தை மாற்றுவது என திட்டமிடப்பட்டது.
பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுங்கள் என்று கூட அவர்கள் வெளிப்படையாக கேட்கவில்லை. உலகப்போர் மூளும் அளவுக்கு மோசமான சூழ்நிலை இருப்பதால், நாடும், நமது குடும்பமும், சந்ததியும் பாதுகாப்பாக வாழ ஒரு நல்ல அரசு அமைய வேண்டும்; அதை மனதில் கொண்டு ஓட்டு போடுங்கள் என உருக்கமாக கேட்டுள்ளனர்.
90 கூட்டங்கள்
மாவட்டத்துக்கு 150 பேர் என மாநிலம் முழுதும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் களம் இறங்கினர். ஒரே மாதத்தில் 16,000 கூட்டங்களை நடத்தினர். செப்டம்பர் 1 முதல் 9 வரை ஒவ்வொரு தொகுதியிலும் 90 கூட்டங்களை நடத்தினர். பழையவர்களுக்கு வாய்ப்பு தராமல், உள்ளூர் புதுமுகங்களை வேட்பாளராக்க பரிந்துரைத்தனர். அதிருப்தியில் இருந்த ஜாட் மற்றும் தலித் இன பிரமுகர்களை ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளும், புது முதல்வரும் அடுத்தடுத்து சந்தித்து இணக்கத்துக்கு கொண்டு வந்தனர்.
விளம்பர பரபரப்பு இல்லாமல், ஆர்.எஸ்.எஸ்., மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள், தேர்தலின் போக்கை திருப்பியது. அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.