UPDATED : பிப் 04, 2025 10:40 PM
ADDED : பிப் 04, 2025 10:33 PM

சண்டிகர்: யமுனை நதியில் விஷத்தை கலந்து டில்லிக்கு ஹரியானா அனுப்புகிறது எனக்கூறிய  டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் மீது ஹரியானா போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டில்லி சட்டசபைத் தேர்தல்  நாளை (5ம் தேதி) நடக்கிறது. பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், யமுனை நதி நீரில் ஹரியானா மாநிலத்தில் தொழிற்சாலைக் கழிவுகளை கலப்பதாகவும், அதனால், டில்லி மக்களுக்கு குடிநீர் வழங்க முடியவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.  இதற்கு ஹரியானாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் மீது போலீசில்  புகார் அளிக்கப்பட்டது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், கெஜ்ரிவால், மற்றும் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் மீது ஹரியானாவின் குருசேத்ராவில் உள் ள ஷாபாத் போலீஸ் ஸ்டேசனில் பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் கலவரத்தை தூண்டுதல், பிரிவினையை ஊக்கப்படுத்துதல், தீக்கு விளைவிக்கும் நோக்கத்தடன் ஒருவர் மீது பொய்யாக குற்றம்சாட்டுதல், மக்களின் உணர்வுகளை  அவமதிக்கும் வகையில் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்களை செய்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது கெஜ்ரிவாலுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

