ஹரியானாவில் கூட்டணி அமைவதில் சிக்கல்: காங்.,கிற்கு சாபம் விடும் ஆம் ஆத்மி
ஹரியானாவில் கூட்டணி அமைவதில் சிக்கல்: காங்.,கிற்கு சாபம் விடும் ஆம் ஆத்மி
ADDED : செப் 07, 2024 05:55 PM

புதுடில்லி: ஹரியானா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கட்சிகள் இடையே கூட்டணி அமைவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால், அங்கு தனித்து போட்டியிட போவதாக கூறியுள்ள ஆம் ஆத்மி, பிற்காலத்தில் காங்கிரஸ் வருத்தப்படும் என சாபமிட்டு உள்ளது.
90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஹரியானா சட்டசபைக்கு அக்.,5 ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆம் ஆத்மி உடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் யோசித்து வந்தது. இது தொடர்பாக இரு கட்சிகளின் நிர்வாகிகள் பேசி வந்தனர். ஆம் ஆத்மி 10 தொகுதிகளை கேட்டது. ஆனால், காங்கிரஸ் 5க்கு மேல் தர முடியாது என பிடிவாதம் காட்டியது. இதனால், கூட்டணி அமைவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து ஆம் ஆத்மியின் தேசிய செயலர் சந்தீப் பதக் கூறியதாவது: 90 தொகுதிகளிலும் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம். கட்சி மேலிடத்திடம் இருந்து உத்தரவு வந்ததும், அனைத்தையும் அறிவிப்போம். இங்கு முழு பலத்தையும் திரட்டி போட்டியிடுவோம். எங்களது பலத்தை குறைத்து மதிப்பிட்டவர்கள் பிற்காலத்தில் வருத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.