பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஹரியானா யு டியூபர் சிக்கினார்: முக்கிய தகவல்களை பகிர்ந்த மேலும் 5 பேர் கைது
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஹரியானா யு டியூபர் சிக்கினார்: முக்கிய தகவல்களை பகிர்ந்த மேலும் 5 பேர் கைது
ADDED : மே 18, 2025 01:17 AM

சண்டிகர்: பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரிகளுக்கு நம் நாட்டின் முக்கியமான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில், ஹரியானாவைச் சேர்ந்த, 'யு டியூபர்' ஜோதி மல்ஹோத்ரா உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற இளம்பெண், சமூக ஊடகமான 'யு டியூப்'பில், 'டிராவல் வித் ஜே.ஓ.,' என்ற சேனலை நடத்தி வருகிறார்.
இதில், பயணம் தொடர்பான வீடியோக்களை அவர் வெளியிட்டு வருகிறார். இந்த சேனலுக்கு, 3.77 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர்.
தலைநகர் டில்லியில் உள்ள பாக்., துாதரகத்தில் பணிபுரிந்த டேனிஷ் என்பவருடன், யு டியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு நட்பு ஏற்பட்டது. அவரது உதவியின்படி விசா பெற்ற ஜோதி மல்ஹோத்ரா, 2023ல் பாகிஸ்தானுக்கு சென்று வந்தார்.
பல்வேறு சலுகைகள்
இதற்கிடையே, உளவு பார்த்த புகாரில், டேனிஷை நாட்டை விட்டு மத்திய அரசு கடந்த, 13ல் வெளியேற்றியது. விசாரணையில், யு டியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு, அவருடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
டேனிஷ் உதவியுடன் பாக்., சென்ற ஜோதி மல்ஹோத்ரா, அங்கு பல்வேறு சலுகைகளை அனுபவித்ததாகக் கூறப்படுகிறது.
அவருக்கு, பாகிஸ்தானின் உளவுத்துறை அதிகாரிகளை டேனிஷ் அறிமுகப்படுத்தி உள்ளார். அந்த அதிகாரிகளின் மொபைல் எண்களை, வேறு பெயரில், தன் மொபைல் போனில் ஜோதி மல்ஹோத்ரா பதிவு செய்தார்.
'வாட்ஸாப், டெலிகிராம்' போன்ற சமூக ஊடகங்களில், பாக்., உளவுத் துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த அவர், நம் நாட்டின் இருப்பிடங்கள் உட்பட முக்கியமான தகவல்களை வழங்கி உள்ளார்.
மேலும், பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துகளையும் பரப்பியதோடு, அந்நாட்டுக்கு ஆதரவாக பிரசாரமும் செய்துள்ளார். மேலும், அந்த அதிகாரிகளுடன் வெளி நாடுகளுக்கும் ஜோதி மல்ஹோத்ரா சுற்றுலா சென்றுள்ளார்.
5 நாட்கள் காவல்
டில்லியில் உள்ள பாக்., துாதரகத்தில், டேனிஷை பல முறை தனியாக சந்தித்து ஜோதி மல்ஹோத்ரா பேசி உள்ளார். பாகிஸ்தானுக்கு உளவு பார்க்க, உளவுத் துறை அதிகாரிகளிடம் இருந்து, அவர் பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த புகாரில், யு டியூபர் ஜோதி மல்ஹோத்ராவை போலீசார் நேற்று கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
இதற்கிடையே, பஞ்சாபின் மலேர்கோட்லா என்ற பகுதியைச் சேர்ந்த குசாலா, 32, என்ற பெண், கடந்த பிப்ரவரியில், விசாவுக்கு விண்ணப்பிக்க டில்லியில் உள்ள பாக்., துாதரகத்துக்கு சென்றார்.
அவருக்கும், டேனிஷ் உடன் பழக்கம் ஏற்பட்டது. இவரும் பணத்தை வாங்கிக் கொண்டு, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்துள்ளார். குசாலாவை கைது செய்த போலீசார், அவரது தோழி பானு நஸ் ரீனாவையும் கைது செய்தனர்.
இது தவிர, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த புகாரில், ஹரியானாவின் கைத்தலைச் சேர்ந்த சீக்கிய மாணவர் தேவிந்தர் சிங் தில்லான், 25, ஹரியானாவின் நுாஹ் மாவட்டத்தைச் சேர்ந்த அர்மான், மலேர்கோட்லாவைச் சேர்ந்த யாமீன் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.