மாணவர்கள் தற்கொலை தொடர்பாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளதா?: விபரம் கேட்கிறது உச்ச நீதிமன்றம்
மாணவர்கள் தற்கொலை தொடர்பாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளதா?: விபரம் கேட்கிறது உச்ச நீதிமன்றம்
ADDED : மே 07, 2025 12:20 AM

புதுடில்லி: ஐ.ஐ.டி., டில்லியில், எஸ்.டி., - எஸ்.சி., சமூகத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் தற்கொலை செய்த சம்பவத்தில், எப்.ஐ.ஆர்., பதிவு செய்யும்படி கடந்த மார்ச் 24ல், டில்லி போலீசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, உயர் கல்வி நிறுவனங்களில் தற்கொலைகளை தடுக்கவும், மாணவர்களின் மனநல பிரச்னைகளை நிவர்த்தி செய்யவும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ரவீந்திர பட் தலைமையில், தேசிய பணிக்குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.டி.பர்திவாலா, ஆர்.மஹாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் உள்ள ஐ.ஐ.டி., கரக்பூரில், மூன்றாமாண்டு படித்து வந்த பீஹாரைச் சேர்ந்த முகமது ஆசிப் கமர், 22, என்ற மாணவர், விடுதி அறையில் கடந்த 4ல் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி, உள்ளூர் போலீசில், ஐ.ஐ.டி., நிர்வாகம் புகார் அளித்துள்ளதா? இது தொடர்பாக எப்.ஐ.ஆ., பதிவு செய்யப்பட்டுள்ளதா?
இதே போல், ராஜஸ்தானின் கோட்டாவில், நீட் தேர்வுக்கு தயாரான மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாகவும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளதா?
கோட்டாவில் இந்தாண்டு இதுவரை மட்டும், போட்டி தேர்வுகளுக்கு தயாரான 14க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர். இந்த தற்கொலைகள் தொடர்பாக எப்.ஐ.ஆர்.,கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை அறிய விரும்புகிறோம். இந்த விபரங்களை உச்ச நீதிமன்ற பதிவாளர் கேட்டு பெற வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.