ADDED : பிப் 16, 2024 07:02 AM

மைசூரு: ''என்னை மீண்டும் ஆசிர்வதியுங்கள் என்று கேட்டு கொள்கிறேன். மக்கள் தீர்மானித்தால், மூன்றாவது முறையாக 'ஹாட்ரிக்' வெற்றி பெற்று, எம்.பி.,யாகி வருவேன்,'' என மைசூரு பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா கேட்டு கொண்டார்.
லோக்சபா தேர்தல் நெருங்குவதை ஒட்டி, தேர்தல் பணிகளுக்காக, மாநிலத்தின் 28 லோக்சபா தொகுதிகளிலும் பா.ஜ., தேர்தல் அலுவலகம் திறக்கும்படி அக்கட்சி மேலிடம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், ஏற்கனவே சில தொகுதிகளில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மைசூரு லட்சுமிபுரத்தில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலக வளாகத்தில், மைசூரு லோக்சபா தொகுதி தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டது.
இதை, முன்னாள் அமைச்சர் அஸ்வத் நாராயணா நேற்று திறந்து வைத்தார்.
பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா, பத்து ஆண்டுகளாக தொகுதிக்கு தான் செய்த வளர்ச்சி பணிகள் குறித்த புத்தகத்தை வெளியிட்டார்.
பின், அவர் பேசியதாவது:
கடந்த பத்து ஆண்டுகளாக, பிரதமர் செய்த பணிகள் என்ன. நான் செய்த பணிகள் என்ன என்பதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
வளர்ச்சியில், 10 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது, இப்போது எப்படி உள்ளது என்பதை கண் கூடாக அறிவீர்.
நான் முதல் முறையாக எம்.பி.,யாவதற்கு முன், 2014க்கு முன்னதாக மைசூருக்கு ஒரு விரைவு ரயில் கூட இல்லை. 11 ரயில்களை, அறிமுகம் செய்து வைத்துள்ளேன். 12வது ரயிலாக விரைவில், மைசூரு - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில் விடப்படும்.
தொகுதி வளர்ச்சிக்காக, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை பெருமளவில் நிதி வழங்கினர். விரைவில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்.
மைசூரு - பெங்களூரு இடையே மெட்ரோ ரயில்; மைசூரு - சென்னை இடையே புல்லட் ரயில் இயக்கப்படும். நான் ஒரு சாதாரண தொண்டர். 2014, 2019ல் என்னை வெற்றி பெற செய்துள்ளீர்.
என்னை மீண்டும் ஆசிர்வதியுங்கள் என்று கேட்டு கொள்கிறேன். மக்கள் தீர்மானித்தால், மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று, எம்.பி.,யாகி வருவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.