"வெறுப்பை அன்பினால் மட்டுமே ஒழிக்க முடியும்": சொல்கிறார் ராகுல்
"வெறுப்பை அன்பினால் மட்டுமே ஒழிக்க முடியும்": சொல்கிறார் ராகுல்
ADDED : பிப் 13, 2024 11:57 AM

சூரஜ்பூர்: வெறுப்பை அன்பினால் மட்டுமே ஒழிக்க முடியும் என சத்தீஸ்கர் மாநிலத்தில் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையின் போது உள்ளுர் மக்களுடன் காங்.,எம்.பி ராகுல் பேசுகையில் குறிப்பிட்டார்.
சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டத்தில் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையின் போது உள்ளூர் மக்களுடன் ராகுல் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: நீங்கள் ஆதிவாசி அல்ல, வனவாசி என்று பா.ஜ., கூறுகிறது. இது பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இதன் பொருள் நீங்கள் காட்டில் மட்டுமே வாழ வேண்டும் என்பது ஆகும். உங்கள் குழந்தைகள் மருத்துவர், வழக்கறிஞர் ஆக கூடாது என பா.ஜ.,வினர் நினைக்கின்றனர்.
அன்பினால் மட்டுமே வெறுப்பை ஒழிக்க முடியும். இந்தியாவில் எங்கு பார்த்தாலும் அதானியின் பெயர்தான் தெரியும். துறைமுகங்கள், விமான நிலையங்கள், உள்ளிட்ட அனைத்தையும் அதானியிடம் பா.ஜ., அரசு ஒப்படைத்துள்ளது. பழங்குடியினர் இந்தியாவின் முதல் உரிமையாளர்கள். இந்தியாவில் பழங்குடியினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் மொத்த மக்கள் தொகை 88 சதவீதம் ஆகும். இவ்வாறு ராகுல் பேசினார்.