மனைவியானாலும் மைனர் பெண்ணுடன் உறவு கொள்வது பலாத்காரமே: மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
மனைவியானாலும் மைனர் பெண்ணுடன் உறவு கொள்வது பலாத்காரமே: மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
ADDED : நவ 15, 2024 11:47 PM

மும்பை: 'மனைவியாகவே இருந்தாலும், 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன் உறவு கொள்வது பலாத்காரமே' என, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் வார்தாவில் வசித்து வந்த சிறுமிக்கு, பக்கத்து வீட்டு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்தனர். கடந்த 2019ல் சிறுமி கர்ப்பமானார்.
இதையடுத்து, இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அடுத்த சில மாதங்களில் சிறுமியை துன்புறுத்திய இளைஞர், கர்ப்பத்திற்கு தான் காரணமில்லை எனக் கூறி, கருவை கலைக்க வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால், கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமி, குழந்தைகள் நலக் குழுவில் புகாரளித்தார்.
இந்த வழக்கில், இளைஞருக்கு 10 ஆண்டு கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பு:
நம் நாட்டில் பெண்களுக்கான திருமண வயது 18. அதேசமயம் தாம்பத்திய உறவுக்கான ஒப்புதல் வயதும் 18 ஆகவே உள்ளது.
எனவே, 18 வயதுக்கு உட்பட்ட பெண் மனைவி யாக இருந்தாலும் அவருடன் உறவு கொள்வது பலாத்காரமாகவே கருதப்படும். சட்டம் இவ்வாறு தெளிவாக இருக்கும் போது, 18 வயதுக்கு குறைவான மனைவியின் சம்மதத்துடனேயே உறவு கொண்டதாக இளைஞர் கூறுவதை ஏற்க முடியாது.
அவர்களுக்கு இடையே நடந்தது திருமணம் என்பதை ஒரு வாதத்திற்கு ஏற்றாலும் கூட, தன் சம்மதம் இல்லாமலேயே உறவு கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
இந்த வழக்கில், இரண்டு விஷயங்கள் கவனிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. முதலில் குற்றம் நடந்த போது, அந்த பெண் சிறுமியாக இருந்துள்ளார் என்பது அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு நடத்தப்பட்ட டி.என்.ஏ., சோதனையில், இளைஞர் தான் அதன் தந்தை என்பதும் உறுதியாகிஉள்ளது. ஆகையால், குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டு கால சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.