ஹவாலா பணம் ரூ.3.26 கோடி கொள்ளை; போலீஸ் போன்று நடித்த கும்பலில் இருவர் கைது
ஹவாலா பணம் ரூ.3.26 கோடி கொள்ளை; போலீஸ் போன்று நடித்த கும்பலில் இருவர் கைது
ADDED : ஜூன் 24, 2025 01:03 AM

பாலக்காடு; கேரளாவில், போலீஸ் போன்று நடித்து, பார்சல் சர்வீஸ் லாரியில் கொண்டு வந்த ஹவாலா பணம், 3.26 கோடி ரூபாயை கொள்ளையடித்த வழக்கில், திருப்பூரைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த துணை வியாபாரி அப்பாஸ் ராமசந்திர பாட்டீல். இவர், கோவையில் உள்ள துணி வியாபாரியான உறவினரிடம், வியாபாரத்துக்காக பணம் அனுப்ப கூறியுள்ளார். இந்நிலையில், பார்சல் சர்வீஸ் லாரியில் ஆவணங்களின்றி அனுப்பி தந்த, 3.26 கோடி ரூபாயை, ஆலப்புழா மாவட்டம் கரியிலக்குளங்கரை அருகே, கடந்த, 13ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு, போலீஸ் போன்று நடித்த கும்பல் கொள்ளையடித்தது.
கரியிலக்குளங்கரை டி.எஸ்.பி., பாபுகுட்டன், இன்ஸ்பெக்டர் நிஜாமுதீன் தலைமையிலான போலீசார் சிறப்பு படையினர் அமைத்து, தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரித்தனர்.
அதில், பணத்தை கொள்ளை அடித்தது தமிழகத்தைச் சேர்ந்த கும்பல் என்பதும் இக்கும்பலில் இருவர் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த திருக்குமார், 43, சந்திரபோஸ், 41, என்பதும் தெரியவந்தது. இதையடுத்து திருப்பூரில் பதுங்கி இருந்த அவர்கள் இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இன்ஸ்பெக்டர் நிஜாமுதீன் கூறியதாவது:
புகார்தாரரின் உறவினர், பார்சல் சர்வீஸ் லாரி டிரைவரிடம், துணி பார்சலில் பணத்தை பதுக்கி வைத்து, அனுப்பியுள்ளார். அந்த பணத்தை, 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, போலீஸ் போன்று நடித்து கொள்ளையடித்தது.
பணம் கடத்திச் செல்வதை அறிந்த கும்பல், இரு ஸ்கார்பியோ மற்றும் இன்னோவோ கார்களில், கோவையிலிருந்து லாரியை பின் தொடர்ந்து, கரியிலக்குளங்கரை பகுதியில் கொள்ளை அடித்து, தமிழகத்துக்கு தப்பி சென்றுள்ளனர். அந்த கும்பலில் இருந்த, திருப்பூரை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளோம்.
கொள்ளையடித்த பணத்தில், ஐந்து லட்சம் ரூபாய் கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளோம். மீதியுள்ள, 8 பேரை பிடிப்பதற்கான விசாரணை தொடர்ந்து நடக்கிறது.
இவ்வாறு, கூறினார்.