என்.ஜி.ஓ.,க்களின் சான்றிதழை புதுப்பிக்க மறுத்த மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்
என்.ஜி.ஓ.,க்களின் சான்றிதழை புதுப்பிக்க மறுத்த மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்
ADDED : ஆக 12, 2026 11:33 PM
கொச்சி: கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு நிதி அளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு என்.ஜி.ஓ.,க்கள் எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சான்றிதழை, எப்.சி.ஆர்.ஏ., எனப்படும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்படி புதுப்பிக்க மறுத்த மத்திய அரசின் முடிவை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கேரளாவில் திருவனந்தபுரத்தின் விழிஞ்சம் பகுதியில், அதானி குழுமத்தின் துறைமுக திட்டத்திற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, 2022ல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு, வெளிநாட்டு நிதியை பயன்படுத்தியதாக உளவுத்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இச்செயலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களான ‘சேவ் ஏ பேமிலி பிளான், கேரளா சோஷியல் சர்வீஸ் அமைப்பு’ ஆகியவற்றின் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்படி வழங்கப்படும் சான்றிதழை புதுப்பிக்க மத்திய அரசு மறுத்துள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, இரண்டு அமைப்புகளும், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த அமைப்புகளுக்கு எதிராக உளவுத்துறை மூலம் பெறப்பட்ட ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை சீலிடப்பட்ட உறையில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
இவற்றை பரீசிலித்த பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
அரசின் திட்டங்களுக்கு எதிராக மக்கள் அமைதியான முறையில் போராடுவது என்பது அரசியலமைப்பால் பாதுகாக்கப்பட்ட ஓர் உரிமை. ஒரு போராட்டத்தின் மீது அரசிற்கு ஏற்படும் வெறுப்பு காரணமாக, அதை ஒரு தேவையற்ற நோக்கம் என்றோ, பொது நலனுக்கு எதிரானது என்றோ முத்திரை குத்த முடியாது.
அந்த அமைப்புகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே எந்தவொரு நேரடி பணப் பரிவர்த்தனைக்கான ஆதாரம் இல்லை. எந்தவொரு உரிமையையும் மறுக்கப்படும் போதும் அதற்கான சரியான காரணங்களை தெளிவுப்படுத்துவது நீதித்துறை அமைப்பிற்கு மிக அவசியமானது. எனவே, மத்திய அரசின் இந்த உத்தரவு சட்டவிரோதமானது; தன்னிச்சையானது எனக்கூறி இந்த நீதிமன்றம் ரத்து செய்கிறது.
எனவே, சம்பந்தப்பட்ட இரண்டு தொண்டு நிறுவனங்களின் விண்ணப்பங்களையும் மத்திய அரசு மீண்டும் பரிசீலித்து, மூன்று மாதங்களுக்குள் புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
