காற்று சுத்திகரிப்பு கருவி மீதான ஜி.எஸ்.டி.,யை குறைக்க ஐகோர்ட் பரிந்துரை
காற்று சுத்திகரிப்பு கருவி மீதான ஜி.எஸ்.டி.,யை குறைக்க ஐகோர்ட் பரிந்துரை
ADDED : டிச 25, 2025 01:42 AM

டில்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமடைந்து வரும் நிலையில், 'ஏர் பியூரிபையர்' எனப்படும், காற்று சுத்திகரிப்பு கருவி மீதான, 18 சதவீத ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை குறைப்பது அல்லது ரத்து செய்வது குறித்து, விரைவில் முடிவெடுக்கும்படி, ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவாசப் பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கபில் மதன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:
காற்று சுத்திகரிப்பு கருவிகளை ஆடம்பரப் பொருளாக கருதாமல், மருத்துவக் கருவிகளாக வகைப்படுத்த வேண்டும். அதன் மீதான, 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா, நீதிபதி துஷார் ராவ் கெடலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் பதிலளிக்க மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கேட்டார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், 'இன்னும் எத்தனை நாள் அவகாசம் தேவை? ஆயிரக்கணக்கான மக்கள் இறந்த பின் தான் நடவடிக்கை எடுக்கப்படுமா? இங்கு வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் துாய்மையான காற்று தேவை. அதை உங்களால் வழங்க முடியவில்லை. குறைந்தபட்சம் காற்று சுத்திகரிப்பு கருவிகளை வாங்குவதற்காவது வழிவகை செய்யுங்கள்' என்றனர்.
மேலும், 'இந்த அவசர காலத்தில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், தற்காலிக நடவடிக்கையாக, காற்று சுத்திகரிப்பு கருவிகளுக்கு ஏன் வரி விலக்கு அளிக்கக் கூடாது' என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
காற்று சுத்திகரிப்பு கருவி மீதான, 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை குறைப்பது அல்லது ரத்து செய்வது குறித்து, விரைவில் முடிவெடுக்கும்படி, ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த கவுன்சில் எப்போது கூடும் என்பதை நாளைக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி அறிவுறுத்தி, வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -

