கட்டாயப்படுத்தி குடிக்க வச்சுட்டான்...ஆண் நண்பருக்கு எதிராக திரும்பிய பெண் ; கொல்லம் கார் விபத்து வழக்கில் திடீர் டுவிஸ்ட்
கட்டாயப்படுத்தி குடிக்க வச்சுட்டான்...ஆண் நண்பருக்கு எதிராக திரும்பிய பெண் ; கொல்லம் கார் விபத்து வழக்கில் திடீர் டுவிஸ்ட்
ADDED : செப் 21, 2024 06:42 PM

கொல்லம்: கேரளாவில் கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவத்தில் ஆண் நண்பருடன் பெண் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 15ம் தேதி மைநாகப்பள்ளி பகுதியில் வேகமாக வந்த கார் மோதிய விபத்தில், ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த குஞ்சுமோல்,47, என்பவர் பரிதாபமா உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோட முயன்ற கார் ஓட்டுநர் அஜ்மல் மற்றும் அவருடன் காரில் இருந்த ஸ்ரீகுட்டி,27, என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் இருந்து ஜாமினில் விடுவிக்கக்கோரி இருவரும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே, அவர்களை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், விபத்து நடந்த இடத்திலும், அவர்கள் தங்கியிருந்த ஓட்டலிலும் விசாரணை நடத்தி ஆதாரங்களை திரட்டினர். அதில், அவர்கள் தங்கியிருந்த அறையில் மது பாட்டில்களும், போதை மருந்துகளைப் பயன்படுத்தும் உபகரணங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தனது ஆண் நண்பர் அஜ்மலுக்கு எதிரான சாட்சியமாக ஸ்ரீகுட்டி திரும்பியுள்ளார். தன்னுடைய நகை மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கத்தை அஜ்மல் ஏமாற்றி விட்டதாகவும், அதனை திரும்பப் பெறுவதற்காகத் தான் அவருடன் பழகி வருவதாக போலீஸாரின் விசாரணையில் ஸ்ரீகுட்டி தெரிவித்துள்ளார்.
மேலும், கார் விபத்து சம்பவத்திற்கு முன்பாக, தன்னை கட்டாயப்படுத்தி மது அருந்தச் செய்ததாகவும், கார் விபத்தில் பெண் சிக்கியது தனக்கு தெரியாது என்றும், விபத்து நடந்த பிறகு, அங்கிருந்து காரை எடுத்து தப்பியோடுமாறு கூறவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.