ADDED : செப் 24, 2024 07:26 AM
பெங்களூரு,: கர்நாடகாவில் நெய்யில் கலப்படம் நடப்பதை தடுக்கும் நோக்கில், நந்தினி நெய்யை தவிர, மற்ற பிராண்ட் நெய் தரத்தை பரிசோதிக்க, கர்நாடக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:
திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க, விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டி உள்ளார். ஒரு முதல்வரே, இதை கூறியுள்ளதால், கர்நாடக அரசு தீவிரமாக கருதுகிறது. நந்தினி நெய்யை தவிர, மற்ற பிராண்ட் நெய்யின் தரத்தை பரிசோதிக்க, சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
தனியார் நிறுவனங்கள் சப்ளை செய்யும் நெய்களின் மாதிரி சேகரித்து, அவற்றின் தரம் பரிசோதிக்கப்படும். கோவில்களில் அளிக்கப்படும் பிரசாதங்களுக்கு பதிலாக, அதற்கு பயன்படுத்தப்படும் நெய்யை பரிசோதிக்கும்படி, உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம், ஆந்திரா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, கர்நாடகாவுக்கு நெய் சப்ளையாகிறது. இவற்றின் மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்யப்படும். திருப்பதி லட்டு விஷயத்தில், மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.