எளிய மக்களுக்கும் எளிதில் மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும்: மோகன் பகவத்
எளிய மக்களுக்கும் எளிதில் மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும்: மோகன் பகவத்
ADDED : ஆக 10, 2025 09:28 PM

இந்தூர்: எளிய மக்களுக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய வகையில் மருத்துவ வசதிகள் இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார்.
இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் கூறியதாவது;
சமூகத்தில் அனைவருக்கும் மருத்துவ வசதிகள் எளிதில் சென்று சேர வேண்டும். ஏராளமான நகரங்களில் இந்த வசதி மக்களுக்கு கிடைக்க வேண்டும். வர்த்தகமயமாக்கல் என்பது மையமாகி விட்டது.
தற்போது பெருநிறுவனங்களின் வணிகமயமாக்கல் சகாப்தம் என்பதின் கீழ் கல்வி நிறுவனங்கள் உள்ளன. முன்பு எல்லாம் ஒவ்வொரு மாகாணத்திலும் கல்வி மையங்கள் இருந்தன. அனைத்து தரப்பு மக்களும் அங்கே தமது குழந்தைகளை கல்வி கற்க அனுப்புவார்கள். குழந்தைகளும் அங்கு கல்வி கற்பார்கள்.
ஆனால், இப்போது கல்வி மையப்படுத்தப்பட்டுவிட்டதால் அவர்கள் படிப்புக்காக நீண்ட தொலைவு பயணிக்க வேண்டி இருக்கிறது. மருத்துவ சிகிச்சை கிடைப்பதிலும் இதே நிலைமைதான் காணப்படுகிறது. நல்ல மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்றால் அவர்கள் நகரை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது.
டில்லியில் புற்றுநோய் சிகிச்சைக்காக 8 முதல் 10 மருத்துவமனைகள் உள்ளன. எனவே சிகிச்கைக்காகவும், தங்குவதற்காகவும் பல செலவுகளை எதிர்கொள்ள வேண்டும். எளிதில் கிடைக்கக்கூடிய மற்றும் அணுகக்கூடிய வகையில் மருத்துவ வசதி தேவை. இதற்கு தீர்வு என்ன? சேவை மனப்பான்மையுடன் அதைச் செய்வது தான் அடிப்படைத் தீர்வு.
இவ்வாறு அவர் பேசினார்.

