மொட்டையடித்து, முடியை வெட்டி சுகாதார பணியாளர்கள் போராட்டம்
மொட்டையடித்து, முடியை வெட்டி சுகாதார பணியாளர்கள் போராட்டம்
ADDED : ஏப் 01, 2025 12:41 AM

திருவனந்தபுரம்: கேரளாவில் சம்பள உயர்வு கோரி, போராட்டம் நடத்தி வரும், 'ஆஷா' சுகாதார பணியாளர்கள், மொட்டையடித்தும், முடியை வெட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகம் முன், 50வது நாளாக நேற்றும், ஆஷா என அழைக்கப்படும் பெண் சுகாதார பணியாளர்கள், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், இவர்களது போராட்டம் நேற்று, 50வது நாளை எட்டியது.
அதை முன்னிட்டு, பெண் சுகாதார பணியாளர்கள் பலர் தங்கள் முடியை வெட்டிக் கொண்டனர்; பலர் மொட்டை அடித்தனர். பெண் சுகாதார பணியாளர்களுக்கு ஆதரவாக ஆண் சுகாதார பணியாளர்கள் சிலரும் தங்கள் தலையை மழித்துக் கொண்டனர்.
ஆஷா பெண் தொழிலாளர்கள் கூறும் போது, 'வெயிலிலும், மழையிலும், 50 நாட்களாக போராட்டம் நடத்தியும் அரசு மற்றும் அமைச்சர்கள் எங்களை கண்டுகொள்ளாமல் உள்ளனர். ஒரு நாளைக்கு, 232 ரூபாய் சம்பளம் பெறும் நாங்கள், அதை வைத்து எப்படி சாப்பிடுவது... தொடர்ந்து எங்களை கண்டுகொள்ளாமல் இருந்தால், சாவதை தவிர வேறு வழியில்லை,' என்றனர்.
ஆலப்புழா மற்றும் அங்கமாலி ஆகிய இடங்களிலும் ஆஷா சுகாதார பணியாளர்களின் போராட்டம் நடந்தது.
இதுகுறித்து கேரள அரசு அதிகாரிகள் கூறும் போது, 'பலமுறை கேட்டுக் கொண்ட பிறகும், மத்திய அரசு நிதியை விடுவிக்கவில்லை. மத்திய அரசின் நிதி வந்தால் தான், ஆஷா தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியும்' என்றனர்.
மத்திய அரசு அதிகாரிகளோ, 'எப்போதோ நாங்கள் பணத்தை கொடுத்து விட்டோம். அந்த நிதியை எவ்வாறு செலவழித்தனர் என்பது குறித்து மாநில அரசு அளிக்கும் அறிக்கைக்காக தான் காத்திருக்கிறோம். அந்த அறிக்கை வந்ததும், மீதி பணத்தையும் கொடுத்து விடுவோம்' என்றனர்.