கெஜ்ரிவால் ஜாமினை எதிர்த்த மனு மீது ஜன.,17ல் விசாரணை
கெஜ்ரிவால் ஜாமினை எதிர்த்த மனு மீது ஜன.,17ல் விசாரணை
ADDED : டிச 11, 2024 10:21 PM
புதுடில்லி:மதுபானக் கொள்கை முறைகேடு மற்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள மனு, ஜன., 17ல் விசாரணைக்கு வருகிறது.
டில்லி அரசின் 2021 -2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அரசின் புதிய கொள்கையை ரத்து செய்த துணைநிலை கவர்னர் சக்சேனா, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரித்த அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில், அப்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட்டோர் கைது செய்யப்பட்டனர். சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளில் சிறப்பு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவை, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தன. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் வழங்கப்பட்டது.
கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமினை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனுத்தாக்கல் செய்தது.
அந்த மனு, நீதிபதி மனோஜ் குமார் ஓஹ்ரி முன் விசாரணைக்கு வந்தது.
கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விக்ரம் சவுத்ரி “அமலாக்கத் துறை தன் மனுவை வாபஸ் பெற வேண்டும்,”என்றார்.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜராக இயலாததால், இந்த மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க அமலாக்கத் துறை சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
இந்த மனு மீது, ஜன.,17ல் விசாரணை நடத்தப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.