'ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மாரடைப்பு, பக்கவாதம் சிகிச்சை'
'ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மாரடைப்பு, பக்கவாதம் சிகிச்சை'
ADDED : மார் 20, 2025 07:24 AM

''மாரடைப்பு, பக்கவாதம் நோய்களுக்கான சிகிச்சையை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்,'' என ராஜ்யசபா ம.ஜ.த., உறுப்பினர் தேவகவுடா வேண்டுகோள் விடுத்தார்.
ராஜ்யசபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தில், அவர் பேசியதாவது:
இந்தியாவில் மாரடைப்பு, பக்க வாதத்தால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆண்டு தோறும் லட்சக்கணக்கானோர் உயிர் இழக்கின்றனர். இதில் 30 சதவீதம் பேர் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது வருத்தம் அளிக்கிறது.
மாரடைப்பு, பக்கவாத சிகிச்சைகளை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். உயிர் காக்கும் மருந்துகளை இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இத்திட்டம், நல்ல திட்டமாகும்.
இந்தியாவின் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள், தரமான சிகிச்சை பெறுகின்றனர். இத்திட்டத்தை 2018ல் பிரதமர் நரேந்திர மோடி துவக்கினார்.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள், செவிலியர்களுக்கு மாதம் 13,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுறது. இந்த ஊதியம் மிகவும் குறைவு.
செவிலியர்கள் தங்கள் குடும்பத்தை காப்பாற்றவும், அரசு மருத்துவமனைகளில் பணியை தொடரவும், அவர்களின் ஊதியத்தை குறைந்தபட்சம் 20,000 ரூபாய் முதல் 28,000 ரூபாய் வரை உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நமது நிருபர் -