ADDED : மே 02, 2025 05:58 AM

புதுடில்லி : நாடு முழுதும் பல்வேறு பகுதிகளிலும் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், 11 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, பஞ்சாப், ஹரியானா, உ.பி., பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிஷா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், கடந்த 2018 -- 22 வரையிலான ஆண்டுகளில் 3,798 பேர் வெப்ப வாதத்தால் உயிரிழந்ததை சுட்டிக்காட்டி உள்ளது.
கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கோடை காலத்தில் நாட்டின் வடக்கு, மத்திய, மேற்கு பகுதிகளில் கடும் வெப்ப அலை வீசும். எனேவே, 11 மாநிலங்களும் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். பொருளாதார ரீதியில் பின்தங்கியோரை கவனிப்பதோடு, திறந்த வெளியில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஆடைகளை வழங்கி, வேலை நேரத்தையும் மாற்றியமைக்க வேண்டும்.
பொது இடங்களில் குடிநீர் வசதி மற்றும் உடலில் நீர்ச்சத்து இழப்பை சரி செய்ய உதவும் 'ஓ.ஆர்.எஸ்., கரைசல்' உள்ளிட்ட மருத்துவ பொருட்களுடன் கூடிய சிறிய அரங்குகளை அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.