கடும் பனிமூட்டத்தால் வாகனங்கள் மோதி விபத்து; போலீஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி
கடும் பனிமூட்டத்தால் வாகனங்கள் மோதி விபத்து; போலீஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி
ADDED : டிச 16, 2025 12:12 AM

நுாஹ்: டில்லி - மும்பை விரைவுச் சாலையில் கடும் பனிமூட்டம் காரணமாக அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் போலீஸ் அதிகாரிகள் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
ஹரியானா மாநிலத்தின் நுாஹ் பகுதியில் அமைந்துள்ள டில்லி - மும்பை விரைவுச் சாலையில், நேற்று அதிகாலை 5:0-0 மணிக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு லாரிகள் மோதிக்கொண்டன.
அப்போது, அடர்ந்த பனிமூட்டம் நிலவியதால் அச்சாலையில் பின்தொடர்ந்து வந்த மற்றொரு லாரியும் மோதி விபத்துக்கு உள்ளானது. அந்த லாரியில் இருந்த கொய்யாப் பழங்கள், சாலைகளில் சிதறின.
ஏற்கனவே பனிமூட்டத்தால் சாலையில் ஈரப்பதம் இருந்த நிலையில், பழங்களும் கொட்டியதால் அடுத்தடுத்து வந்த வாகனங்களால் பிரேக் பிடிக்க முடியாமல் ஒன்றன்பின் ஒன்று மோதின. சங்கிலித்தொடராக நிகழ்ந்த இந்த விபத்தில், 20 முதல் 25 வாகனங்கள் மோதிக்கொண்டன.
தகவலறிந்து வந்த போலீசார், மீட்புக்குழுவின் உதவியுடன் வாகனங்களில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.இதில், ராஜஸ்தானைச் சேர்ந்த சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படைப்பிரிவின் இன்ஸ்பெக்டர், பெண் உதவி எஸ்.ஐ., மற்றும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மற்றொரு நபர் என மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுதவிர, 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், பலரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.
இதேபோல் உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா - காஜியாபாத் இடையே நேற்று காலை அடர்ந்த பனிமூட்டம் காரணமாக 12 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில், பலர் படுகாயம்அடைந்தனர்.

