டில்லியில் நீடிக்கும் கடும் பனிமூட்டம் 2வது நாளாக விமான சேவை பாதிப்பு
டில்லியில் நீடிக்கும் கடும் பனிமூட்டம் 2வது நாளாக விமான சேவை பாதிப்பு
ADDED : ஜன 04, 2025 11:47 PM

புதுடில்லி: டில்லியில் நிலவிய அடர்ந்த பனிமூட்டம் காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக விமான, ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
வட மாநிலங்களில் குளிர்காலம் துவங்கி உள்ள நிலையில், பெரும்பாலான பகுதிகளில் குறைந்த வெப்பநிலை பதிவாகி வருகிறது.
குறிப்பாக தலைநகர் புதுடில்லியில் நேற்று அதிகாலை அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்ஷியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியசாகவும் பதிவானது.
இதன் காரணமாக, டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் நிலவியது. விமானம் மற்றும் ரயில் சேவைகள் நேற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
பார்வைத்திறன் பூஜ்ஜியம் என்ற நிலையை எட்டியதால், நேற்று அதிகாலையில் டில்லி விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
அப்போது, டில்லி வந்த 19 விமானங்களை தரையிறக்க முடியாமல், வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
இதனால், பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
ஏராளமான பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர். இதேபோல், பனிமூட்டம் காரணமாக ரயில் சேவையும் பாதிப்புக்குள்ளானது.
பிரதான ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு கடும் தாமதத்திற்கு உள்ளானது. நேற்று மட்டும், 81 ரயில் சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டதாக வடக்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நேற்று முன்தினம் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக, டில்லியில் மட்டும் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.