தலித் மணமகனின் குதிரை ஊர்வலத்துக்கு ராஜஸ்தானில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
தலித் மணமகனின் குதிரை ஊர்வலத்துக்கு ராஜஸ்தானில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ADDED : ஜன 23, 2025 01:22 AM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் திருமண வரவேற்பின் போது தலித் மணமகன் குதிரையில் ஊர்வலம் வரும் நிகழ்வில் ஜாதி மோதல் நிகழாமல் தடுப்பதற்காக, 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரைச் சேர்ந்தவர் விஜய் ரேகர். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கும், அதே சமூகத்தைச் சேர்ந்த அருணா கோர்வால் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ராஜஸ்தானில் திருமணத்தின் ஒரு பகுதியாக பந்தோலி எனும் மணமகன் ஊர்வலம் நடக்கும். இதில், மணமகன் குதிரையில் ஏறி ஊரை வலம் வருவார். உறவினர்கள், நண்பர்கள் ஆட்டம் பாட்டத்துடன் பின் தொடர்வர்.
இந்நிலையில், தலித் மக்கள் இதுபோல் குதிரையில் ஏறி வலம் வருவதற்கு சில ஜாதியினர் எதிர்ப்பு தெரிவித்து, அது கலவரமான சம்பவம் ராஜஸ்தானின் சில கிராமங்களில் நடந்துள்ளன.
இதனால், பெண்ணின் தந்தை நாராயன், உள்ளூர் சமூக செயற்பாட்டாளர் ரமேஷ் சந்த் பன்சால் என்பவரிடம் தன் அச்சத்தை தெரியப்படுத்திஉள்ளார்.
இது குறித்து அவர் தேசிய மனித உரிமை கமிஷனுக்கு கடிதம் எழுதியதுடன், உள்ளூர் போலீசாரின் உதவியையும் நாடினார்.
அவர்கள் கிராமத்தில் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். அதில், அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்று, எந்த பிரச்னையும் நிகழாது என உறுதி அளித்தனர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் மணமகன் விஜய் ரேகரின் திருமண ஊர்வலம், 200க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக நடந்தது.