ADDED : ஜூன் 24, 2024 04:56 AM

இடாநகர்: வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக, தென்மேற்கு பருவமழையால் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதன் காரணமாக, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதன் பாதிப்புகளில் இருந்து மாநில மக்கள் மீண்டு வரும் நிலையில், நேற்று காலை இடாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு கன மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.
கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவித்த மக்களை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தேசிய நெடுஞ்சாலைகளிலும் வெள்ளநீர் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
இது தவிர, நகரின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதால், பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் எனவும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதில், உயிர் சேதம், பொருட் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து எந்த விபரத்தையும் மாநில அரசு வெளியிடவில்லை.