ADDED : அக் 05, 2025 04:46 AM
திருப்பதி: திருப்பதியில் தொடர்ந்து கனமழை பெய்ததால், நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, மலைப் பாதையில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், விழிப்புணர்வுடன் இருக்கும்படி ஊழியர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான ப குதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக் கிழமையான நேற்று, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
கனமழையையும் பொருட்படுத்தாமல் நீண்டவரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தொடர் மழை காரணமாக பக்தர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நிழல் பந்தல்கள், மடங்களில் தங்கி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்வதால், மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தேவஸ்தான நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடும்படி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.