கனமழையால் திடீர் பனிச்சரிவு: 10 மலையேற்ற வீரர்கள் மாயம்
கனமழையால் திடீர் பனிச்சரிவு: 10 மலையேற்ற வீரர்கள் மாயம்
UPDATED : செப் 27, 2026 06:25 PM
ADDED : செப் 27, 2026 06:12 PM

காத்மாண்டு: நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஹிம்லங் ஹிமால் மலையில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், அடிவாரத்தில் முகாமிட்டிருந்த 10 மலையேற்ற வீரர்களின் நிலைமை என்னவானது என தெரியவில்லை.
நம் அண்டை நாடான நேபாளத்திற்கு ஆண்டுதோறும் பக்தர்கள் பலர் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏற, பல்வேறு நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்களும் நேபாளத்திற்கு செல்வது வழக்கம். கடந்த ஆக., 26ல் பனி ஏரி உருகியதால், திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 1,453 பேர் உயிரிழந்தனர். 5,285 பேர் மாயமாகியுள்ளனர்.
இந்த பாதிப்பில் இருந்து நேபாளம் மீள்வதற்குள், கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், மானாங் மாவட்டத்தில், 20,000 அடி உயர ஹிம்லங் ஹிமால் மலையில் நேற்று பனிச்சரிவு ஏற்பட்டது. மலையேற்றத்திற்காக அடிவாரத்தில் தங்கி இருந்த மலையேற்ற வீரர்களில் 10 பேர் பனிச்சரிவில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மாயமான அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரூபந்தேஹி மாவட்டத்தில், டினாவ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் புட்வால் பகுதியில் கரையோரம் இருந்த ஆறு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், கரையோரத்தில் வசித்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சித்வான் மாவட்டத்தில் நாராயணி ஆறு மற்றும் ரியு ஆறு ஆகியவற்றிலும் வெள்ள அபாயத்தை கடந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
