ADDED : ஆக 10, 2025 12:09 AM
புதுடில்லி:டில்லியில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால், சுவர் இடிந்து விழுந்ததில் இரு குழந்தைகள் உட்பட ஏழு பேர் பரிதாபமாக இறந்தனர். தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தலைநகர் டில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 8:30 முதல், நேற்று காலை 8:30 மணி வரை இடைவிடாது கனமழை கொட்டியது.
2 குழந்தைகள் இதனால், தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. கனமழையால் ஹரிநகரில் பழைய கோவிலின் சுற்றுச்சுவர் இடிந்து, அருகே இருந்த தகரகொட்டகை வீடுகள் மீது விழுந்தது.
இந்த இடிபாடுகளில் சிக்கி, பழைய பொருட்களை சேகரித்து விற்கும் தொழிலாளர்கள், குழந்தைகள் என, எட்டு பேர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர், அவர்களை மீட்டு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், ஒருவர் மட்டும் உயிர் தப்பிய நிலையில், சிகிச்சை பலனின்றி இரு குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, எதிர்காலத்தில் மீண்டும் அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், தகர கொட்டகை வீடுகளை அகற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
கனமழையால் ரக் ஷா பந்தன் பண்டிகையை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட முடியாத நிலையும் ஏற்பட்டது.
வெள்ளம் குறிப்பாக முக்கிய சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியதால், வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்றன. இதனால், பல கி.மீ., துாரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
அதே போல் கனமழையால் விமானப் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. 300க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணியர் இன்னலுக்கு ஆளாகினர்.
அபாய கட்டம் யமுனை நதியிலும் அபாய கட்டத்தை எட்டும் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் அச்சத்ததில் ஆழ்ந்துள்ளனர்.
அதிகபட்சமாக பிரகதி மைதான் பகுதியில் ஒரே நாளில் 10 செ.மீ., அளவுக்கு மழை பதிவானது. அடுத்தபடியாக, லோதி சாலை மற்றும் சப்தர்ஜங் பகுதியில் முறையே 8.7 செ.மீ., மற்றும் 7.8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.