ஜம்மு - காஷ்மீரில் பலத்த மழை: 5 பேர் பலி; 50 வீடுகள் சேதம்
ஜம்மு - காஷ்மீரில் பலத்த மழை: 5 பேர் பலி; 50 வீடுகள் சேதம்
ADDED : ஏப் 21, 2025 03:17 AM

ஜம்மு : ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில், நேற்று காலை பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, ஐந்து பேர் உயிரிழந்தனர்; 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில், நேற்று காலை பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
செரி பாக்னா என்ற கிராமத்தில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சகோதரர்கள் அகிப் அகமது, முகமது சாகிப் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
தரம் குண்ட் என்ற கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. தொடர் மழையால், ஜம்மு -- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், நஷ்ரி -- பனிஹால் பகுதிகளுக்கு இடையே நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து தடைபட்டது.
ராம்பன் மாவட்டத்தில் வெள்ளத்தால் சிக்கித் தவித்த, 100க்கும் மேற்பட்ட மக்களை, மீட்புப் படையினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர்.
கனமழை, மேக வெடிப்புகள், சூறாவளி காற்று, நிலச்சரிவுகள் காரணமாக, ராம்பன் மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, மழை பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய முதல்வர் ஒமர் அப்துல்லா, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும்படி உத்தரவிட்டார்.

