மஹாராஷ்டிராவில் 3 நாட்களாக கனமழை; மும்பையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மஹாராஷ்டிராவில் 3 நாட்களாக கனமழை; மும்பையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : ஆக 19, 2025 05:46 AM

மும்பை: மஹாராஷ்டிராவில் அதி கனமழை கொட்டி வரும் சூழலில், நான்டேட் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள 200 பேரை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். மும்பையில் பஸ், ரயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை முடங்கின.
மஹாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. மும்பை, தானே, நான்டேட், லத்துார், பிதார் உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டி வரும் மழை, மக்களின் அன்றாட வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது.
மும்பையில் நேற்று காலை 6:00 முதல் 8:00 மணி வரை 17 செ.மீ., மழை பதிவானது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
அதிகனமழைக்கான 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டதை அடுத்து, அவசியமின்றி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என மும்பை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.
இடைவிடாது பெய்த மழையால், பள்ளி, கல்லுாரிகளுக்கு மதியத்துக்கு மேல் விடுமுறை விடப்பட்டது.
பெரும்பாலான மாணவர்கள் மழையில் நனைந்தபடி வீடு திரும்பினர். மாதுங்கா பகுதியில் குழந்தைகளுடன் வீடு திரும்பிய பள்ளி பஸ், மழை வெள்ளத்தில் சிக்கியது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், குழந்தைகளை தங்கள் முதுகில் சுமந்தபடி பாதுகாப்பாக மீட்டனர்.
மழை வெள்ளம் காரணமாக ஆங்காங்கே பஸ்கள் பழுதாகி நின்றன. இருப்புப் பாதைகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால், புறநகர் ரயில் சேவைகள் முடங்கின. தண்ணீர் அகற்றப்பட்டதை அடுத்து, ரயில் சேவைகள் தொடர்ந்தன. இருப்பினும், மெதுவாகவே ரயில்கள் இயக்கப்பட்டன.
மும்பை விமான நிலையத்தின் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியதால், விமானங்கள் தரையிறங்க முடியாமல் பல மணி நேரம் வானில் வட்டமிட்டன; அவை, அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
மும்பையில் இருந்து, 600 கி.மீ., தொலைவில் உள்ள நான்டேட் மாவட்டத்தில், மழை வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது; 200க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கினர். அவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர்.
ராவண்கோன், ஹஸ்னால் கிராமங்களில் 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், மாயமான ஐந்து பேரை தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
மழை வெள்ள சேதங்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்வையிட்ட முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ''வெள்ள நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முகாம்களில் தங்கியுள்ளோருக்கு தேவையான உதவிகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
''மழை மேலும் சில நாட்கள் தொடரும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,'' என கேட்டுக் கொண்டார்.