வட மாநிலங்களில் கொட்டும் கனமழை; நீர்நிலைகளில் அதிகரிக்கும் நீர்மட்டம்
வட மாநிலங்களில் கொட்டும் கனமழை; நீர்நிலைகளில் அதிகரிக்கும் நீர்மட்டம்
UPDATED : ஆக 04, 2025 11:04 AM
ADDED : ஆக 04, 2025 01:16 AM

புதுடில்லி: வட மாநிலங்களில் பரவலாக பெய்து வரும் பலத்த மழையால், அங்குள்ள நீர்நிலைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பீஹார்
பீஹாரில், பாட்னா, முசாபர்பூர், பெகுசராய், பாகல்பூர், போஜ்பூர், ஜெகனாபாத், நாளந்தா உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பாட்னாவில் நேற்று பெய்த கனமழையால், முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது மழை பெய்வதால், ஆறுகள், அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுஉள்ளனர். இதற்கிடையே, மழை பாதிப்பை கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்கும்படியும், நீர்நிலைகளை கண்காணிக்கும்படியும் முதல்வர் நிதிஷ் குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஹிமாச்சல்
ஹிமாச்சலில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால், இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட, மொத்தம் 307 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மண்டி மாவட்டத்தில், 156 சாலைகள் மூடப்பட்டுஉள்ளன. பருவமழை துவங்கியதில் இருந்து இதுவரை, ஹிமாச்சலில், 1,692 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் பெய்து வரும் பலத்த மழையால், டீஸ்டா, ஜல்தகா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும், சிக்கிம் மாநிலத்தை மேற்கு வங்கத்தின் சிலிகுரியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 10ல் நிலச்சரிவு ஏற்பட்டதால், வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கடவுளின் ஆசி!
முதல்வர் பஜன் லால் சர்மா பகவான் கிருஷ்ணரை தினமும் வழிபடுவதால், ராஜஸ்தானில் பலத்த மழை பெய்கிறது. மக்கள் அன்றாட பணிகளை தொடரவும், வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் மழையை குறைக்கும்படி, பகவான் இந்திரனையும் அவர் வழிபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. - கே.கே. விஷ்னோய் ராஜஸ்தான் வணிக இணை அமைச்சர், பா.ஜ.,

